Last Updated : 01 Jan, 2019 10:59 AM

 

Published : 01 Jan 2019 10:59 AM
Last Updated : 01 Jan 2019 10:59 AM

ஸ்மார்ட் போன் அடிமையா நீங்கள்?- எளிதாக விடுபட புதிய ‘ஆப்ஸ்’ தயார்: மருத்துவர்கள் கண்டுபிடிப்பு

அதீதமான ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இருந்து விடுபடமுடியாமல் தவித்து வருபவர்களுக்கும், ஸ்மார்ட் போன் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் தவிப்பவர்களுக்கும் அதில் இருந்து எளிதாக விடுபடும் வகையில் புதிய செயலி (ஆப்ஸ்) ஒன்றை மருத்துவர்கள் குழு கண்டுபிடித்துள்ளனர்.

இந்தச் செயலியை ஸ்மார்ட் போனில் பதிவேற்றம் செய்து கொள்வதன் மூலம், ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரின் அன்றாட நடவடிக்கைகள், பயன்பாடு ஆகியவற்றைக் கண்காணித்து தகவல் அளித்து கட்டுக்குள் வைத்து, பயன்பாட்டைக் குறைக்கும்.

தேசிய நரம்பியல் அறிவியல் மற்றும் மனநிலை மருத்துவ மையத்தைச்(நிம்ஹன்ஸ்) சேர்ந்த மருத்துவர்கள் குழு இந்தச் செயலியைக் கண்டுபிடித்துள்ளனர். தொழில்நுட்பத்தை ஆரோக்கியமாகப் பயன்படுத்தும் சேவை (எஸ்எச்யுடி) என்ற மருத்துவக் குழுவை உருவாக்கி செயலியைத் தயாரித்துள்ளனர். இந்தச் செயலிக்கு டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox app) எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்தச் செயலியை தயாரித்து கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2018 செப்டம்பர் வரை 18 வயது முதல் 25 வயதுவரை இருக்கும் 240 கல்லூரி மாணவ, மாணவிகளிடம் அளித்துப் பயன்படுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் 75 சதவீதம் கல்லூரி மாணவ, மாணவிகள் தாங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் விதத்தில் மாற்றத்தையும், பயன்படுத்தும் நேரமும் குறைந்துள்ளதை அறிந்தனர்.

இந்தச் செயலியை நாம் ஸ்மார்ட் போனில் பதிவேற்றம் செய்யும்போது, நம்முடைய விவரங்கள் குறித்து அதில் பதிவு செய்வது கட்டாயமாகும். மேலும், செயலி பயன்பாட்டாளர்கள் தாங்கள் எந்தவகையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறீர்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும், அதாவது தூக்கம் குறைபாடு, கண் வலி, தனிமையால் பாதிப்பு, அதிகமான ஃபேஸ்புக் பயன்பாடு, குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகுதல் போன்ற பாதிப்புகளைக் குறிப்பிட வேண்டும். மேலும், ஸ்மார்ட் போன், மொபைல் போன் பயன்படுத்துவதால், கல்வி, வேலை, மற்றவர்களுடன் கலந்துரையாடுதல், நண்பர்களிடம் நேரத்தைச் செலவிடுதல் ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா, பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை குறிப்பிட வேண்டும்.

இது குறித்து இந்த ஆப்ஸ் வடிவமைத்த மருத்துவக் குழுவின் தலைவரும், நிம்ஹன்ஸ் மருத்துவமனையின் உளவியல் பிரிவு பேராசிரியருமான மனோஜ் குமார் சர்மா கூறியதாவது:

''தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களை 3 வகையாகப் பிரிக்கலாம். தேவைக்கு ஏற்ப பயன்படுத்துபவர்கள், மிதமாகப் பயன்படுத்துபவர்கள், செல்போன் அடிமைகளாக இருப்பவர்கள். அதிகமான புள்ளி விவரங்களை இருந்தால்தான் இந்த ஆய்வுகளில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டால் ஏற்படும் மாற்றங்களையும் அறிய முடியும். ஆனால், போதுமான அளவு விவரங்கள் அளிக்கப்படாவிட்டால், ஸ்மாட்போன் பயன்பாட்டுக்கு அடிமையாக இருப்பவர்களை மீட்க இந்தச் செயலி துணை புரியாது.

செல்போன் அடிமையாக இருப்வர்கள் மற்றவர்களிடம் உதவி கேட்காமல், தாங்களே அந்தக் குறைபாட்டில் இருந்து மீள இந்த செயலி மிகுந்த உதவி புரியும்''.

இவ்வாறு மனோஜ் குமார் சர்மா தெரிவித்தார்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் டிஜிட்டல் டிடாக்ஸ் (‘Digital Detox by Shut Clinic’) என்ற பெயரில் கிடைக்கும். இதைக் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

இதற்கான ப்ளே ஸ்டோர் லிங்க் - Digital Detox by Shut Clinic

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x