Last Updated : 30 Dec, 2018 09:11 AM

 

Published : 30 Dec 2018 09:11 AM
Last Updated : 30 Dec 2018 09:11 AM

வாரணாசி கோயிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலின்: கருணாநிதிக்கு ஈமச்சடங்கு செய்ததாக சர்ச்சை

திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, தனது உறவினர்களுடன் கடந்த வாரம் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கோயில்களுக்கு சென்று வந்தார். இவர் சமீபத்தில் மறைந்த தனது மாமனாரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு ஈமச்சடங்கு செய்யவே வாரணாசி சென்றதாக சமூகவலைதளங்களில் சர்ச்சை எழுந்தது.

மேலும், “துர்கா வருகையை அறிந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அவர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை செய்யுமாறு உத்தரவிட்டார். தமிழ் தெரிந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரியையும் நியமித்தார்” என்றும் தகவல் வெளியானது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழ் சார்பில் வாரணாசியில் விசாரித்ததில் சில உண்மை கள் தெரியவந்தன. துர்கா ஸ்டாலின் கடந்த 19-ம் தேதி இரவு ஹைதராபாத்தில் இருந்து வாரணாசிக்கு விமானத்தில் சென்றார். வெளிமாநிலத்தில் இருந்து வாரணாசிக்கு செல்லும் முக்கிய அரசியல்வாதிகளுக்கு உ.பி. அரசு சார்பில் பாதுகாப்பு வசதிகள் செய்வது வழக்கம். அதன்படி தமிழக முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் மனைவி என்பதால் துர்காவுக்கு பாதுகாப்பாக 2 போலீஸார் பணி அமர்த்தப்பட்டனர். இதற்காக, சென்னையில் இருந்து வாரணாசி மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல்வரால் பாதுகாப்பு வழங்கப்பட்டது என கூறுவதில் உண்மை இல்லை.

மேலும் பொதுவாகவே கோயில்களுக்கு செல்லும் வழக்கம் உடையவர் துர்கா. அந்த வகையில்தான் வாரணாசிக்கு முதன்முறையாக சென்றுள்ளார். இவர் கருணாநிதிக்கு ஈமச்சடங்கு செய்தார் என்பது தவறான செய்தி ஆகும்.

இதுகுறித்து வாரணாசியில் ஈமச்சடங்கு கள் செய்துவரும் தமிழக புரோகிதர்கள் வட்டாரம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, “கருணாநிதியின் உடலை புதைத்துவிட்டதால் இங்கு எந்த சடங்குகளும் இப்போதைக்கு செய்யத் தேவையில்லை. ஒரு ஆண்டு முடிந்த பிறகு வேண்டுமானால் பிண்டதானம் செய்யலாம். இங்கு துர்கா எந்த சடங்கும் செய்யவில்லை” என்றன.

மடத்துடன சம்பந்தம்

வாரணாசியில் உள்ள திருக்கோவிலூர் மடம் மற்றும் ஸ்ரீகுமாரசாமி மடத்திற்கும் துர்கா சென்றுள்ளார், இவ்விரு மடங்களும் தமிழகத்தைச் சேர்ந்தவை. குமாரசாமி மடத்துடன் துர்காவின் மாமனார் குடும்பத்திற்கு சம்பந்தம் உள்ளது.

மாமனாரின் தந்தை பணியாற்றிய மடம்

திருவாரூரில் உள்ள தட்சணாமூர்த்தி மடத்தில் கருணாநிதியின் தந்தை பணியாற்றி இருந்தார். இது, திருக்குவளையின் தர்மபுரம் ஆதீனம் மடத்தின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. இந்த ஆதீனம் மடத்தார், தன் கிளை மடமாகக் கருதி குமாரசாமி மடத்தின் மடாதிபதிகளாக வருபவர்களுக்கு பதவி ஏற்பு செய்து வைக்கிறார்கள்.

துர்காவுடன் குடும்பத்தார்

தற்போது உ.பி.யில் நடுங்கும் குளிர் நிலவுகிறது. இதை பொருட்படுத்தாது வாரணாசி வந்த துர்காவுடன் அவரது வயதான சித்தி, சகோதரி சாருமதி, உறவினர்களான ஷண்முகசுந்தரம் மற்றும் ஜெயந்தி ஆகியோர் இருந்தனர்.

பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த இவர்கள், கங்கையில் படகு சவாரி செய்தனர். குறுகலான தெருக்களில் செல்ல சைக்கிள் ரிக்ஷாவைப் பயன்படுத்தினர். மேலும் ரூ.2 லட்சம் ரூபாய்க்கு பனாரஸ் பட்டு புடவைகளையும் துர்கா வாங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x