Published : 30 Dec 2018 08:24 AM
Last Updated : 30 Dec 2018 08:24 AM

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நாளை தாக்கல்: நிறைவேற்ற விடாமல் தடுக்க எதிர்க்கட்சிகள் திட்டம்

முத்தலாக் தடை திருத்த மசோதா மக்கள வையில் நிறைவேறியதை அடுத்து, அந்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அரசு நாளை தாக்கல் செய்கிறது. ஆனால், மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

முஸ்லிம் சமூகத்தில் 3 முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இத னால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படு வதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முத்தலாக் நடைமுறைக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி தடை விதித்தது.

இதற்கிடையில், முத்தலாக் நடைமுறையைத் தடுக்க, முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, முத்தலாக் விஷயத்தில் மனைவி மற்றும் உறவினர்கள் மட்டுமே வழக்குத் தொடுக்கும் உரிமை, மைனர் குழந்தைகள் இருந்தால் மனைவியிடம் ஒப்படைக்க வேண்டும், கணவனுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக மாஜிஸ்திரேட் முடிவெடுப்பது ஆகிய 3 திருத்தங்கள் மசோதாவில் சேர்க்கப்பட்டன.

இந்த முத்தலாக் தடை திருத்த மசோதா, கடந்த வியாழக்கிழமை மக்கள வையில் தாக்கல் செய்யப்பட்டு கடும் விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப் பட்டது. இந்நிலையில், மாநிலங்களவை யில் நாளை முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. மசோதாவை மாநிலங்களவையில் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.

எனினும், மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுக்க காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மாநிலங்களவை நாளை திங்கட்கிழமை காலை கூடுவதற்கு முன்னர், எதிர்க்கட்சித் தலைவர்கள் கூடி அவையில் எப்படி செயல்படுவது என்பது குறித்து முடிவெடுக்க உள்ளனர். இதனால் அவையில் அனல் பறக்கும் விவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொறடா உத்தரவு

கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாளை மாநிலங்களவைக்கு தவறாமல் வரவேண்டும் என்று வலியுறுத்தி கொறடா உத்தரவு பிறப்பிக்கவும் முடி வெடுத்துள்ளன. அதே போல், ஆளும் பாஜக வும் தங்கள் உறுப்பினர் கள் நாளை மாநிலங்கள வையில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று வலியறுத்தி உள்ளது.

எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டா லும், மசோதாவை நிறை வேற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதற்காக மாநிலங்கள வையில் 9 எம்.பி.க் களைக் கொண்டை பிஜு ஜனதா தளம் கட்சி, 6 எம்.பி.க்களைக் கொண்ட தெலங்கானா ராஷ்டிர சமிதி, 2 எம்.பி.க் களைக் கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, ‘‘முத்தலாக் மசோதாவை தற்போதைய வடிவில் மாநிலங்களவையில் நிறைவேற்ற நாங்கள் விடமாட்டோம். முத்தலாக் தடை மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தபோது, அதை 10 கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்தன. மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் அதிமுக கூட மசோதாவை எதிர்த்தது. திரிணமூல் காங்கிரஸும் எதிர்த்தது. எனவே, மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம். இந்த மசோதா சட்டமானாலும் முஸ்லிம் பெண்களுக்கு எந்த வகையிலும் உதவாது’’ என்றார்.

129 எம்பிக்கள் ஆதரவு

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன் கூறும்போது, ‘‘மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 244 உறுப்பினர்களில், 13 அதிமுக எம்.பி.க் கள் உட்பட எதிர்க்கட்சிகளுக்கு 129 எம்.பி.க் களின் ஆதரவு உள்ளது’’ என்றார்.

இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் வரும் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஆதரவைப் பெருக்கி கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, முத்தலாக் தடை திருத்த மசோதவை, நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x