Published : 29 Dec 2018 12:29 PM
Last Updated : 29 Dec 2018 12:29 PM

எலி தான் காரணம்: ஆயிரம் லிட்டர் மதுவையும் குடித்துவிட்டதாக போலீஸார் அறிக்கை: உ.பி.யில் வினோதம்

உத்தரப்பிரதேசம், பரேலி போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டு இருந்த ஆயிரம் லிட்டர் மதுவையும் எலி குடித்துவிட்டதாக போலீஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கையால் உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கு முன் பிஹார் மாநிலத்திலும் மதுவை எலி குடித்துவிட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர், கஞ்சாவை தின்றுவிட்டதாக ஜார்கண்ட் போலீஸாரும், ரூபாய் நோட்டுகளைச் சேதப்படுத்தியதாக அசாமிலும் எலி மீது பழிபோட்டு தப்பித்திருந்தது கவனிக்கத்தக்கது.

பரேலி கண்டோன்மென்ட் போலீ்ஸ் நிலையத்தின் சார்பில் சட்டவிரோத மதுபாட்டில்கள், கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் உள்ள  பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், அந்த மதுபாட்டில்களையும், கேன்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க போலீஸாருக்கு உயர் அதிகாரிகள் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டனர்.

அந்த குடோனை திறந்தபோலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது அங்கிருந்த பாட்டில்கள் அனைத்தும் காலியாகவும், கேன்களில் மது இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இங்கு நடந்த சம்பவத்தை தங்களின் உயர் அதிகாரிகளுக்கு பரேலி போலீஸார் தகவல் அளித்து மது அனைத்தையும் எலி குடித்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

ஆனால், இதை ஏற்க மறுத்த பரேலி மாவட்ட போலீஸ் எஸ்.பி. அபிநந்தன் சிங், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உத்தவிட்டுள்ளார். குடோனில் வைக்கப்பட்டிருந்த மது அனைத்தையும் எலி குடித்துவி்ட்டதா அல்லது வேறு ஏதேனும் முறைகேடு நடந்ததா என்றுவிசாரிக்க உத்தரவிட்டார்.

போலிஸ் எஸ்.பி. அபிநந்தன் சிங் கூறுகையில், “ பரேலி கன்டோன்மென்ட் போலீஸ் நிலையத்துக்குச் சமீபத்தில் நியமிக்கப்பட்ட கிளார்க் போலீஸ் நரேஷ் பால், குடோனே திறந்துபார்த்தபோது, அனைத்து மதுபாட்டில்களும் காலியாகக் கிடந்துள்ளன, மது வைக்கப்பட்டிருந்த கேன்களும் காலியாக இருந்தன. சில எலிகளும் மதுபாட்டில்கள் அருகே இருந்ததை அவர் பார்த்துள்ளார்.

விசாரணைக்காக மட்டும் மதுவை சிறிது வைத்துக்கொண்டு மற்றவற்றை உடனுக்குடன் அழிக்கப் பலமுறை போலீசுக்கு அறிவுறுத்தினேன். ஆனால், யாரும் செவிமெடுக்கவில்லை என்பதால் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே பரேலியில் உள்ள அரசு கல்லூரியில் விலங்கியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் கூறுகையில், “ எலிகள் தாங்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு அருகே குடிக்க நீர் இல்லாவிட்டால், மது இருந்தால்கூட குடித்துவிடும். ஆனால், ஆயிரம் லிட்டர் மதுவையும் எலி குடித்துவிடும் என்று கூறுவதை நம்முடியாததாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x