Published : 20 Dec 2018 10:59 AM
Last Updated : 20 Dec 2018 10:59 AM

‘‘பிரதமர் வேட்பளராக ராகுல் காந்தி’’ - ஸ்டாலின் கருத்துக்கு மம்தா பானர்ஜி பதில்

பிரதமர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து இப்போதைக்கு பேசுவது பொருத்தமானதல்ல என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

கருணாநிதி, சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தார். இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த தோழமை கட்சிகள் பல பாராட்டு தெரிவித்துள்ளன.

எனினும் தேசிய அளவில் காங்கிரஸூடன் நட்பு பாராட்டும் பல கட்சிகளும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிய தயக்கம் காட்டி வருகின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த, திரிணமுல் காங்கிரஸ் மாநிலங்களவை கட்சித் தலைவர் டெரிக் ஓ பிரையன், தெலுங்குதேச கட்சியின் மாநிலங்களவை எம்.பி ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர், பிரதமர் பதவி குறித்து தேர்தலுக்கு பின்பே முடிவு செய்ய வாய்ப்புள்ளது, தற்போதைக்கு பிரதமர் வேட்பாளராக யாரையும் அறிவிக்க வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது:

‘‘பிரதமர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து இப்போதைக்கு பேசுவது பொருத்தமானதல்ல. பிரதமர் பதவியை பொறுத்தவரை விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். தனிநபர்கள், கட்சிகள் மட்டுமே இதனை முடிவு செய்ய முடியாது. அனைத்துக்கட்சிகளும் அமர்ந்து இதனை முடிவு செய்யும். அதற்கான தருணம் வரும்போது அனைவரும் ஒன்றாக பேசி ஒத்த கருத்துடன் முடிவெடுப்போம்’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x