Last Updated : 18 Dec, 2018 02:52 PM

 

Published : 18 Dec 2018 02:52 PM
Last Updated : 18 Dec 2018 02:52 PM

பதவியேற்றவுடன் அறிவிப்பு: ரூ.6,100 கோடி வேளாண் கடன் தள்ளுபடி, நெல்லுக்கு கூடுதல் விலை: சத்தீஸ்கர் முதல்வர் அதிரடி

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் ரூ.61,00 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும், நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வராகப் பதவியேற்ற பின் பூபேந்திர பாகேல் அறிவித்தார்.

முதல்வராக பூபேந்திர பாகேல் பதவியேற்ற பின் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. மேலும், 2013-ம் ஆண்டு ஜிராமில் நடந்த நக்சலைட்டுகள் தாக்குதலில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மீண்டும் புதிதாக விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்தது வந்தது. சமீபத்தில் அங்கு நடந்த தேர்தலில் 90 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியது. அங்கு முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் பூபேந்திர பாகேல் தேர்வு செய்யப்பட்டு நேற்று முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

பூபேந்திர பாகேலுடன், அமைச்சர்களா டி.எஸ்.சிங் தியோ, தம்ராஜ்வாத் சாஹு ஆகியோரும் பதவி ஏற்றனர். அதன்பின் புதிய தலைமைச் செயலகத்தில் முதல்வர் பூபேந்திர பாகேல் அமைச்சர்களுடனும், தலைமைச்செயலாளருடன் ஆலோசனை நடத்தினார்.

அந்தக் கூட்டத்துக்குப் பின் முதல்வர் பூபேந்திர பாகேல் நிருபர்களிடம் கூறியதாவது:

''மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் கூறியதுபோல் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். முதல்கட்டமாக 16.65 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள், சத்தீஸ்கர் கிராம வங்கியில் நவம்பர் 30-ம் தேதி வரை வாங்கியுள்ள ரூ.6.100 கோடி மதிப்புள்ள அனைத்து பயிர்க் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். மற்ற வங்கிகளிலும் பயிர்க் கடன் விவசாயிகள் பெற்றிருந்தால், அதுகுறித்து வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தும். இந்தக் கடன் தள்ளுபடி மூலம், விவசாயிகளின் பொருளாதார, சமூக நிலை சற்று உயரும். இதற்கான முறைப்படி உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்.

இரண்டாவதாக நெல்லுக்கு தற்போது ஆதார விலையாக குவிண்டால் ரூ.1,750 வழங்கப்பட்டு வருகிறது. இந்த விலையை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்த ஆதார விலையை ரூ.2,500 ஆக உயர்த்தி இருக்கிறோம். மீதமுள்ள ரூ.750 மாநில அரசு விவசாயிகளுக்கு வழங்கும். தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.300 போனஸாக வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 450 ரூபாயை மாநில அரசு நெல்லுக்கு வழங்கும்.

ஆதலால், இனி மாநிலத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 விலையில் அரசு கொள்முதல் செய்யும்.

மேலும், கடந்த 2013-ம் ஆண்டு மே, 25-ம் தேதி பஸ்தர் மாவட்டம், ஜிராமில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தேசிய விசாரணை முகமை விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்தது. ஆனால், சதி குறித்து கோணத்தில் விசாரணை நடத்தப்படவில்லை. இந்தத் தாக்குதல் குறித்து மீண்டும் விசாரணைக் குழு அமைக்கப்படும்.

மாநிலத்தில் நக்சலைட்டுகள் பிரச்சினையை தீர்க்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பழங்குடி மக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளும், மறுவாழ்வுத்த் திட்டங்களும் செய்யப்படும்.

முந்தைய அரசு துப்பாக்கி மூலம் நக்சலைட் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றது, அது சரியானவழி அல்ல. முதலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அதன்பின் அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க முயல வேண்டும்''.

இவ்வாறு பூபேந்திர பாகேல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x