Published : 16 Dec 2018 04:40 PM
Last Updated : 16 Dec 2018 04:40 PM

கர்நாடகா கோயில் பிரசாத சம்பவம்: பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு : கோஷ்டிப் பகையால் விஷம் கலக்கப்பட்டதா?

கர்நாடகா மாநிலம் சாமராஜ்நகரில் உள்ள சுலாவதி கிராமத்தில் இருக்கும் கிச்சுகட்டி மாரம்மா கோயில் பிரசாதம் சாப்பிட்டவர்களில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

 

பிரசாதம் உண்டு பாதிக்கப்பட்டவர்களில் 66 நோயாளிகள் தனியார் மருத்துவமனையிலும் 28 பேர் கே.ஆர்.மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். சலம்மா, மகேஸ்வரி ஆகிய நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிர்காப்புக் கருவிகளுடன் சிகிச்சைப் பெற்று வரும் 6 நோயாளிகளும் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

 

சாம்ராஜ்நகரில் உள்ள கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் சிகிச்சை பலனின்றி 13 பேர் உயிரிழந்தனர். 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரசாதத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்.

 

கோயில் பிரசாதத்தில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்  2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

 

பலியானவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் குமாரசாமி, அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்தார்.

 

மாரம்மா கோவிலை நிர்வகிப்பதில் 2 பிரிவினருக்கு இடையே கோஷ்டி மோதல் இருந்துள்ளது.  அதன் காரணமாக ஒரு கோஷ்டியினர் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவில்  விஷத்தை கலந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x