Last Updated : 16 Dec, 2018 03:40 PM

 

Published : 16 Dec 2018 03:40 PM
Last Updated : 16 Dec 2018 03:40 PM

சத்தீஸ்கர்: 2013-ல் நக்சல் தாக்குதலில் காங்கிரஸ்க்கு கைகொடுத்தவருக்கு முதல்வர் பதவி

சத்தீஸ்கர்மாநில முதல்வராக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பூபேஷ் பாஹெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அந்த கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நாளை மாலை பூபேஷ் பாஹெல் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்து, ராமன் சிங் முதல்வராக இருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களைக் கைப்பற்றி அசுரப்பெரும்பான்மை பெற்றது. பாஜக 15 இடங்களுடன் 2-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. மாநில காங்கிரஸ் தலைவர் பூபேந்திர பாஹெல், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டி.எஸ்.சிங் தியோ, மக்களவை எம்.பி. தம்ரத்வாஜ் சாஹு, முன்னாள் மத்திய அமைச்சர் சரண் தாஸ் மஹந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த 4 பேரில் யாரை முதல்வராகத் தேர்வு செய்வது என்ற குழப்பம் நீடித்தது. இது தொடர்பாக கடந்த 5 நாட்களாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் சிங் தியோ, பாஹெல இடையே கடும் போட்டி நிலவியதில் பூபேந்திர பாஹெலை முதல்வராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டது.

ராய்பூரில் இன்று நடந்த புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு இன்று முறைப்படி அறிவிக்கப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் கூறுகையில், “ சத்தீஸ்கரில் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. புதிய முதல்வராக பூபேந்திர பாஹெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமத்துவமான, வெளிப்படையான அரசு அமையும், விவசாயிகளுக்கு உறுதியளித்த கடன் தள்ளுபடி செய்யவும் வாழ்த்துக்கள் “ எனத் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் பதவிக்கு தியோவும், பாஹெலுக்கும் கடும் போட்டி நிலவியது, ஆனால், 2013-ம் ஆண்டு நக்சல் தாக்குதலில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில், கட்சியை மாநிலத்தில் வழிநடத்திய பெருமை பாஹெலுக்கு உரியது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை அதன்பின் நன்கு வளர்த்தும், அஜித் ஜோகி வெளியேறிய நிலையிலும் கட்சியை உருக்குலையாமல் பாதுகாத்ததும் பாஹெலாகும். அதனால், பாஹெலுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பூபேந்திர பாஹெல் இன்று நிருபர்களிடம் கூறுகையில், “ முதல்வராகப் பதவி ஏற்ற 10 நாட்களில் விவசாயிகளுக்கு பயிர்கடன்தள்ளுபடி செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஓபிசி சமூகத்தினர் 52 சதவீதம் இருக்கின்றனர், அந்த ஓபிசி சமூகத்தில் இருந்து பாஹெல் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அஜித் ஜோகி முதல்வராக இருந்தபோது, அதில் வருவாய் துறை அமைச்சராக பாஹெல் பதவி வகித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x