Published : 15 Dec 2018 03:43 PM
Last Updated : 15 Dec 2018 03:43 PM

பிறந்த 2 மணிநேரத்தில் பாஸ்போர்ட், ஆதார்: குஜராத்தில் சாதனை குழந்தை

குஜராத்தில் பிறந்த 2 மணிநேரத்தில் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ், ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் என அனைத்து அரசு சான்றுகளும் பெறப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.  

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த அங்கித் - பூமி தம்பதியருக்கு டிசம்பர் 12-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ரம்யா என பெயர் சூட்டப்பட்டது. குழந்தை பிறந்து உடனேயே அதற்கு பாஸ்போர்ட் வாங்கவும், ஆதார் எண் பெறவும், அவரது பெற்றோர் திட்டமிட்டனர். ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் என அனைத்தையும் வேகமாக பெற்ற குழந்தை என்ற பெயரை தங்கள் குழந்தை பெற வேண்டும் என எண்ணினர். தங்கள் குழந்தைக்கு அனைத்தையும் பெறுவதற்காக முன்கூட்டியே அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரவித்தனர்.

அதன்படி அந்த பெண் குழந்தை பிறந்ததை உடனடியாக பதிவு செய்து சூரத் மாநகராட்சி அதிகாரிகள் வேகமாக பிறப்புச் சான்றிதழ் வழங்கினர். இதை பயன்படுத்தி ரேஷன் கார்டு மற்றும் ஆதாருக்கும் விண்ணப்பிக்கப்பட்டது. அதுபோலவே ஒரே நேரத்தில் பாஸ்போர்ட் பெறவும் அங்கீத் விண்ணப்பத்தை அனுப்பினார்.

முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் தயாராக இருந்ததால் உடனடியாக வேலைகள் நடந்தன. குழந்தை பிறந்த 2 மணிநேரத்தில் அனைத்து பணிகளும் முடிந்து குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ், ஆதார், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு என அனைத்தும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து குழந்தையின் தந்தை அங்கீத் கூறுகையில் ‘‘பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டேன். அரசின் அனைத்து ஆவணங்களும் உள்ள மிக குறைந்த வயது கொண்ட பெண் குழந்தை என்ற பெருமையை எனது மகள் பெற வேண்டும் என நினைத்தேன். அது நிறைவேறியுள்ளது. முழு ஒத்துழைப்பு வழங்கி அதிகாரிகளுக்கு எனது நன்றி’’ எனக் கூறினார்.   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x