Published : 14 Dec 2018 12:40 PM
Last Updated : 14 Dec 2018 12:40 PM

சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவிகோரி குஜ்ஜார் சமூகத்தினர் போராட்டம்: காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி

ராஜஸ்தான் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்கக்கோரி, குஜ்ஜார் சமூகத்தினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைமைக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி, காங்கிரஸ் அரியணை ஏறுகிறது.

மத்தியப்பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் பெயருக்கு கமல் நாத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும் ராஜஸ்தானில் முதல்வர் தேர்வில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. மூத்த தலைவர் அசோக் கெலாட், ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும் இளம் தலைவருமான சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மூத்த தலைவர்கள் பலரும் அசோக் கெலாட்டு ஆதரவு தெரிவித்தாக கூறப்படுகிறது. அதுபோலவே நீண்ட அனுபவம் கொண்ட கெலாட்டை முதல்வர் பதவியில் அமர வைக்க சோனியா காந்தியும் விரும்புவதாக தெரிகிறது. கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தல் பிரச்சார சமயத்தில் முதல்வர் பதவி தொடர்பாக ராகுல் வாக்களித்தாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில் சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கரோலியில் நேற்று குஜ்ஜார் சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனது ஆதரவாளர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என சச்சின் பைலட் நேற்று வேண்டுகோள் விடுத்தார்.

‘‘முதல்வர் பதவி தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி முடிவெடுப்பார்கள். அந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என தனது ட்வீட்டர் பக்கத்தில் சச்சின் பைலட் கூறியிருந்தார்.

ஆனால் சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக இரண்டாவது நாளாக இன்றும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆல்வார் பகுதியில் குஜ்ஜார் சமூக மக்கள் இன்று சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீஸார் தலையிட்டு அவர்களை வெளியேற்றினர்.
இந்த போராட்டத்தால் காங்கிரஸ் தலைமைக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x