Published : 14 Dec 2018 11:20 AM
Last Updated : 14 Dec 2018 11:20 AM

ஒரே ஒரு முறை வங்கிக் கடன் ஏய்ப்புக்காக மல்லையாவை திருடன் எனக் கூறுவது நியாயமல்ல: நிதின் கட்கரி

ஒரே ஒரு முறை வங்கிக் கடன் ஏய்ப்பு செய்ததற்காக விஜய் மல்லையாவை திருடன் என்று சொல்வது நியாயமாகாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

தனியார் நிறுவனம் ஒன்று ஒருங்கிணைத்த பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட நிதின் கட்கரி பேசியதாவது:

"40 ஆண்டுகளாக விஜய் மல்லையா அவர் வாங்கிய வங்கிக் கடன்களுக்கு சரியான நேரத்தில் வட்டியைச் செலுத்தி வந்தார். விமானத் தொழிலில் நுழைந்த பின்னர் அவர் பிரச்சினைகளை சந்திக்க ஆரம்பித்தார். அப்புறம் திடீரென அவரை திருடனாக்கிவிட்டனர்?

ஒரு நபர் 50 ஆண்டுகள் சரியாக வங்கிக் கடனைச் செலுத்திவிட்டு ஒரே ஒரு முறை செலுத்தத் தவறினால் அவரை ஏமாற்றுக்காரர் என்று கூறுவதா?" என்று பேசினார்.

பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து பெற்ற ரூ.9000 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத குற்றத்துக்காக விஜய் மல்லையாவை இங்கிலாந்து நீதிமன்றம் நாடு கடத்தி அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பேசிய நிதின் கட்கரி, தான் குறிப்பிட்ட வங்கிக் கடனானது மகாராஷ்டிரா அரசுக்கு சொந்தமான சிக்காம் குழுமத்திலிருந்து மல்லையா பெற்றது குறித்து என்றும் அந்தக் குழுவிடம் அவர்  பெற்ற கடனுக்கு 40 ஆண்டுகளாக ஒழுங்காக வட்டி செலுத்தியதாகவும் கூறினார்.

மேலும் அவர் பேசும்போது, "தொழிலில் ஏற்றமும் இறக்கமும் இருப்பது இயல்புதான். தொழில் சரியும்போது வீழ்ச்சி காண்பவரை ஆதரிக்க வேண்டும். வங்கித் துறை, இன்சூரன்ஸ் என எந்தத் துறையாக இருந்தாலும் ஏற்றம், இறக்கம் இருக்கும். ஆனால், கடன் பெற்றவர் சர்வதேச அல்லது உள்நாட்டுப் பொருளாதாரச் சிக்கல்களால் பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தால் அப்போது அவருக்கு உதவ வேண்டும்.

நான் 26 வயதில் தேர்தலில் தோல்வியுற்றேன். ஆனால், அது என் அரசியல் வாழ்க்கைக்கே முற்று என்று நான் கருதவில்லை.

நீரவ் மோடியோ அல்லது விஜய் மல்லையாவோ தவறு செய்திருந்தால் அவர்களைச் சிறைக்கு அனுப்புங்கள். ஆனால், பிரச்சினையுடன் வருபவர்களை எல்லாம் ஏமாற்றுப் பேர்வழிகள் என முத்திரை குத்தினால் நமது பொருளாதாரம் மேம்படாது" என நிதின் கட்கரி  கூறினார்.

விஜய் மல்லையாவுக்கும் தனக்கும் எந்தவித தனிப்பட்ட நட்பும் இல்லை என்றும் கடைசியாக அவர் தெளிவுபடுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x