Last Updated : 14 Dec, 2018 11:05 AM

 

Published : 14 Dec 2018 11:05 AM
Last Updated : 14 Dec 2018 11:05 AM

‘தேவைக்குப் பயன்படுத்த பணம், பொற்காசு நிறைந்த பெட்டியா ரிசர்வ் வங்கி?’- மத்திய அரசை விளாசிய ப.சிதம்பரம்

தங்களின் தேவைக்கு எடுத்து பயன்படுத்த பணம், பொற்காசுகள் நிறைந்த பெட்டி ரிசர்வ் வங்கி என்று மத்திய அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் காட்டமாக பேசியுள்ளார்.

புதுடெல்லியில் லோக்மாத் தேசிய கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவுக்குப் பின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸை மத்திய அரசு நியமித்து இருப்பது வருத்தமளிக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சக்தி காந்ததாஸ் ஆதரவு தந்தவர், அவரை ஆளுநராக நியமித்து இருக்கிறது மத்தியஅரசு.

இருந்தாலும், ரிசர்வ் வங்கியின் சுயாட்சி, தனிச்சுதந்திரம் ஆகியவற்றை நிலைநாட்ட சக்தி காந்ததாஸ் முயற்சிப்பார் என்று நம்புகிறேன்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை யார் ஆதரித்து இருந்தாலும் அது தவறுதான். ஒரு விஷயத்தில் சரியாக இருந்த மற்றொரு விஷயத்தில் தவறாக இருந்தாலும் அது தவறுதான். நீங்கள் தவறு செய்திருந்தால் அதை பணிவுடன், நேர்மையுடன் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், சக்தி காந்ததாஸ் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தவறானது என்று வெளிப்படையாகக் கூறுவதற்கு அவருக்குச் சுதந்திரம் இருந்ததா என்பது சந்தேகம்தான்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர்களாக இப்போது நியமிக்கப்பட்ட சக்தி காந்ததாஸும், இதற்கு முன் இருந்த உர்ஜித் படேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பாராட்டியவர்கள்தான். பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியதால்தான் உர்ஜித் படேல் தன்மீதான மரியாதையை இழந்தார்.

சக்தி காந்ததாஸ் தற்போது பொருளாதார செயலாளர் இல்லை, நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும் இல்லை. அவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆதலால், ரிசர்வ் வங்கியின் சுயாட்சியை, சுதந்திரத்தை நிலைநாட்டும் வகையில் செயல்படுவார், அதற்குரிய பொறுப்புகள் அவருக்கு இருக்கிறது என்று நம்பலாம்.

ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் இருப்பது உண்மைதான். ரிசர்வ் வங்கி தன்னுடைய வங்கிதான், தன்னுடைய துறைதான் என்று மத்திய அரசு நினைக்கிறது. சிபிஐ அமைப்பை தன்னுடைய பேச்சைக் கேட்கும்போது, ரிசர்வ் வங்கி கேட்காதா என்று மத்திய அரசு நினைக்கிறது. ரிசர்வ் வங்கி சுயாட்சித் தன்மை மிகுந்தது என்று அறிய மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை.

ரிசர்வ் வங்கியிடம் இருந்து உபரிநிதியை எடுத்து ஒருபோதும் மத்திய அரசு தனது நிதிப்பற்றாக்குறையை நிரப்பப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது.

ரிசர்வ் வங்கியை மத்திய அரசு தங்களின் சொத்து போல கருதுகிறது. ரிசர்வ் வங்கி என்பது, பணம் நிரப்பி வைத்திருக்கும் பெட்டியாகவும், பொற்காசுகள் நிறைந்த பானையாகவும் எப்போது வேண்டுமானாலும் தேவைக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது.

ஜிஎஸ்டி வரியால் பல்வேறு செலவுகளையும், நிதிப்பற்றாக்குறையையும் மத்திய அரசு சமாளிக்க வேண்டுமே தவிர, ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை எடுத்து அல்ல.

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x