Last Updated : 14 Dec, 2018 09:00 AM

 

Published : 14 Dec 2018 09:00 AM
Last Updated : 14 Dec 2018 09:00 AM

மத்தியப் பிரதேச முதல்வராக கமல் நாத் தேர்வு: ராஜஸ்தானில் குழப்பம் நீடிப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூத்த தலைவரும், 7 முறை எம்.பி.யாக இருந்த 72 வயதான கமல் நாத் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ராகுல் காந்தி இல்லத்தில் நேற்று நள்ளிரவு வரை நடந்த நீண்ட ஆலோசனைக்குப் பின் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.மத்தியப்பிரதேசத்தின் சிந்த்வாரா மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 7 முறை வென்றவர் கமல் நாத் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த தலைவர் கமல் நாத்துக்கும், இளம் தலைவர் ஜோதிர்தியா சிந்தியாவுக்கும் இடையே முதல்வர் பதவிக்கு போட்டி இருந்த நிலையில், அதில் கமல் நாத் வென்றுள்ளார். இன்று காலை 10.30 மணி அளவில் ஆளுநர் ஆனந்திபென் படேலைச் சந்திக்கும் கமல் நாத் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்று தெரிகிறது.

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரேசத்தில் சமீபத்தில் முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 114 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. பெரும்பான்மை இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ் கட்சிக்கு, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆதரவு அளித்ததால், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி 15 ஆண்டுகளுக்குப் பின் அங்கு அமைய உள்ளது.

ஆனால், முதல்வருக்கான போட்டியில் மூத்த தலைவர் கமல் நாத்தும், இளம் தலைவர் ஜோதிர்தியா சிந்தியாவுக்கும் இடையே போட்டி இருந்தது. யாரைத் தேர்வு செய்வது என்றகுழப்பம் நீடித்ததைத் தொடர்ந்து டெல்லிக்கு இருவரும் விரைந்து கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கமல் நாத், ஜோதிர்தியா சிந்தியா, மத்தியப்பிரதேச தேர்தல் பார்வையாளர் ஏ.கே.அந்தோணி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நள்ளிரவுவரை நீடித்த ஆலோசனைக்கூட்டத்துக்குப்பின், மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத்தை ஒருமனதாகத் தேர்வு செய்தனர். இந்தத் தகவலை மத்தியப் பிரதேச தேர்தல் பார்வையாளர் ஏ.கே. அந்தோனி முறைப்படி நேற்று இரவு அறிவித்தார்.

அதன்பின் கமல் நாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “என்னை முதல்வராகத் தேர்வு செய்ய ஆதரவு அளித்த சிந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு அவருடன் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. காங்கிரஸ் கட்சி தேர்தலில் வாக்களித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்கும். குறிப்பாக விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி நிறைவேற்றப்படும் “ எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவியிலும் கமல் நாத் இருந்துள்ளார் என்றபோதிலும், மத்தியப் பிரதேச முதல்வராக முதல்முறையாக இப்போதுதான் பதவி ஏற்கிறார். மறைந்த முதல்வர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்ட கமல்நாத் இப்போது, ராகுல் காந்தியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

ராஜஸ்தான் மாநில முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை இன்னும் அறிவிக்கவில்லை. அங்கு மூத்த தலைவர் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தில், காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பகேல், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த டி.எஸ். சிங் தேவ், முன்னாள் மத்திய அமைச்சர் சரண் தாஸ் மஹந்த், சத்தீஸ்கர் மாநில எம்.பி. தாம்ரத்வஜ் சாஹு ஆகியோர் இடையே போட்டி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x