Published : 13 Dec 2018 05:02 PM
Last Updated : 13 Dec 2018 05:02 PM

பாஜக தோல்வி: உ.பி.யில் மோடிக்கு எதிராக யோகியைப் பாராட்டி பேனர்கள் வைத்த 3 பேர் கைது

ராஜஸ்தான், ம.பி. மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக தம் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தும், யோகியைப் பாராட்டியும் உ.பி.யின் லக்னோவில் பேனர்களை அமைத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உ.பி. தலைநகரான லக்னோ நகரின் சில முக்கியப் பகுதிகளில் அமைக்கப்பட்ட பெரிய அளவிலான பேனர்கள் நேற்று பெரும் சர்ச்சையைக் கிளப்பின. இதன் ஒருபுறம் பிரதமர் மோடி, மறுபுறம் முதல்வர் யோகியின் படங்கள் இடம் பெற்றிருந்தன.

அதன் வாசகங்களில் மூன்று மாநிலத் தேர்தல் தோல்விக்கு யார் பொறுப்பு எனவும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதன் பதிலாக மோடியை விமர்சித்தும், யோகியைப் பாராட்டியும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதனால், கடும் அதிருப்திக்கு உள்ளான பாஜகவினர் தம் மாநிலத் தலைமையிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உ.பி. மாநில போலீஸார் அதிரடியாகச் செயலில் இறங்கி, பதாகைகள் அனைத்தையும் அகற்றி விட்டனர்.

இத்துடன், பேனர்கள் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதன் குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி சில மணிநேரங்களில் கைது செய்து சாதனை படைத்துள்ளனர். இதில் பைரைய்ச் நகரின் சுமித், உன்னாவின் இக்ராமுத்தீன் மற்றும் மதியொனின் மணிஷ் அகர்வால் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஹசரத்கன்ச் காவல்நிலைய ஆய்வாளரான ராதாராமன்சிங் கூறும்போது, ''ராஜ்பவனின் முக்கிய சாலைகளை மறைக்கும் வகையில் இந்த பெரிய பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன. இதனால், அதை வைத்தவர்கள் மீது ஐபிசி 505 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம்'' எனத் தெரிவித்தார்.

பேனர்களை வைத்து கைதானவர்கள் உ.பி.யின் அமித் ஜானி என்பவர் தலைமையிலான ‘நவ் நிர்மான் சேனா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. தாக்கூர் எனும் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு உ.பி.யில் அரசியல் கட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x