Last Updated : 13 Dec, 2018 04:45 PM

 

Published : 13 Dec 2018 04:45 PM
Last Updated : 13 Dec 2018 04:45 PM

602 தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணமாகப் பெற்ற ரூ.750 கோடியை வட்டியுடன்  திரும்ப ஒப்படைக்க உத்தரவு

டெல்லியின் 602 தனியார் பள்ளிகள் தம் மாணவர்களிடம் கல்விக்கட்டணமாக ரூ.750 கோடியை கூடுதலாகப் பெற்றுள்ளனர். அம்மாநில உயர் நீதிமன்றம் அமைத்த குழு அந்தத் தொகையை பெற்றோரிடம் ஆறு சதவீத வட்டியுடன் திரும்ப ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் அரசு நிதிஉதவி பெறாத 785 தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்விக்கட்டணம் அதிகமாக இருப்பதாகப் புகார் எழுந்தது. இதன் மீது சில பெற்றோர்கள் தொடுத்த பொதுநல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இதன் சார்பில் கடந்த 2011-ல் உயர் நீதிமன்றம் தனியார் பள்ளிகள் வசூலித்த கல்விக்கட்டணங்களைப் பரிசீலிக்க ஒரு நிபுணர் குழு அமைத்தது. இந்தக் குழு அளித்த பரிந்துரையில் 602 பள்ளிகள் கூடுதலாகப் பெற்ற ரூ.750 கோடியை திரும்ப ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக டெல்லி மாநில அரசின் கல்வி இயக்குநரகத்திடன் தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதற்காக அந்த இயக்குநரகம் அமைத்த நிபுணர் குழுவும் இதேபோன்ற ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இதன்படி, ரூ.28.37 கோடியை ஐந்து தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் திரும்ப ஒப்படைத்தன. இயக்குநரகத்தின் நிபுணர் குழுவின் பரிந்துரையை மற்ற தனியார் பள்ளிகள் அப்போது ஏற்காதமையால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு டெல்லியின் தனியார் பள்ளிகள் மீதான வேறு பல புகார்களையும் விசாரித்து வருகிறது. இதனால், வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் அதன் பதவிக்காலத்தை மேலும் ஒன்பது மாதங்களுக்கு நீட்டிக்க அனுமதி கோரியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x