Published : 13 Dec 2018 02:01 PM
Last Updated : 13 Dec 2018 02:01 PM

வெற்றி பெற்ற ராகுலுக்கு வாழ்த்து தெரிவிக்காத பிரதமர் மோடியின் ஈகோ: சிவசேனா காட்டம்

5 மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்திருப்பதன் மூலம் அநீதி, பொய்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. மோடிக்கு ஈகோ இருப்பதால்தான் இன்னும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று சிவசேனா கட்சி காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளது.

இந்தி பேசும் முக்கிய மாநிலங்களான சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. இந்தத் தோல்வி குறித்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா’வில் இன்றைய தலையங்கத்தில் பாஜகவின் தோல்வி குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்று முழங்கினார்கள். ஆனால், இந்த வார்த்தையை முழக்கமிட்ட பாஜகவில் உள்ள தொண்டர்களின் குரல்கூட ஓங்கி ஒலிக்கவில்லை. மோடியும், அமித் ஷாவும் பங்கேற்ற ஒவ்வொரு கூட்டத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு இரங்கல் செய்தியை வாசித்தனர்.

ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உங்களின் கோட்டையில் வந்து உங்களை வீழ்த்தியுள்ளார். இந்தத் தோல்வி மூலம், அநீதியும், பொய்களும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. பெரும் கர்வம் கைப்பற்றப்பட்டு, அகங்காரம் நசுக்கப்பட்டுள்ளது.

நம்முடைய நாட்டின் கலாச்சாரத்தில் தேர்தல் என்றால் ஒருவர் வெற்றி பெறும்போது தோல்வி அடைந்தவர் வாழ்த்துவதும், அந்தத் தோல்வியை பணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் மரபாகும். ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பின் அந்த மரபு அழிக்கப்பட்டுவிட்டது.

பாஜகவை யாரெல்லாம் கட்டமைத்தார்களோ அவர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். சோதனையான நேரத்தில் துணையாக இருந்த நண்பர்கள், எதிரிகளாகச் சித்தரிக்கப்பட்டார்கள். தூசியில் இருந்து உங்களை மேலே உயர்த்திய மக்கள் இன்று அழிக்கப்படுகிறார்கள். இந்த 5 மாநிலத் தேர்தலில் பாஜக ஒருமாநிலத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. ஏனென்றால், நாட்டுக்குத் தொழிலதிபர்கள் தேவையில்லை.

தேர்தல் நடந்த மாநிலங்களில் பிரதமர் மோடி 12-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் எல்லாம்ல ராகுல் காந்தியை இரக்கமின்றி விமர்சித்துப் பேசினார். தான் வகிக்கும் உயர்ந்த பதவி குறித்துக் கவலைப்படாமல், தரம் தாழ்ந்து பேசினார்.

5 மாநிலத் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்வதில்கூட மோடிக்கு 'ஈகோ' இருப்பதால்தான், வெற்றி பெற்ற ராகுல் காந்திக்கு இன்னும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

தேர்தலில் கிடைத்த வெற்றியை ராகுல் காந்தி பணிவுடன் ஏற்றுக்கொண்டு, பாஜக முதல்வர்களின் பங்களிப்பை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், நாட்டைக் கட்டமைக்க பாடுபட்ட ஜஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் பங்களிப்பை மோடி ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை.

பாஜகவைக் கட்டமைக்க முக்கியக் காரணமாக இருக்கும் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியைக்கூட ஏற்றுக்கொள்ள மோடி விரும்பவில்லை.

இந்தப் புயலில் ஏன் ராகுல் காந்தி தாக்குப்பிடித்தார்?, பல்வேறுவிதமான காயங்கள் ஏற்பட்டும் ஜனநாயகம் ஏன் நிலைக்கிறது?, அதற்கான விடை பணிவு மட்டுமே. தேர்தலில் கிடைத்த முடிவுகள் பாடங்கள். ஆனால், பாஜகவினர் இந்தப் பாடங்களை ஏற்க விரும்புவார்களா?''

இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x