Published : 13 Dec 2018 01:17 PM
Last Updated : 13 Dec 2018 01:17 PM

ராகுல் காந்தியை தவிர்த்த பிரதமர் மோடி: 5 மாநிலத் தேர்தல் முடிவு எதிரொலி?

நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தின் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பார்த்து பேசுவதை, பிரதமர் மோடி தவிர்த்து விட்டார். அவர் அருகில் கூட நிற்காமல் விலகிச் சென்றார்.

சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியில் இருந்த 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்துள்ளதால், சத்தீஸ்கர், ம.பி. ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றபின் அந்தக் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றி என்பதால், அந்தக் கட்சியினரால் ராகுல் காந்தி பாராட்டப்பட்டு வருகிறார். மோடி அலை ஓய்ந்து ராகுல் அலை எழுந்துள்ளதாக காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும் புகழ்ந்து வருகின்றன.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் புகுந்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் 17-ம் ஆண்டு நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாடாளுமன்றத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவை சபாநாயகர் சுமித்திர மகாஜன், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்த ராகுல் காந்தியுடன் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட சில மத்திய அமைச்சர்கள் கைகுலுக்கினர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பிரதமர் மோடி கைகுலுக்கி பேசினார். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேசுவதையும், கைகுலுக்குவதையும் பிரதமர் மோடி தவிர்த்து விட்டார். அஞ்சலி நிகழ்ச்சியின் போது இரு தலைவர்களும் சற்று இடைவெளி விட்டே நின்றனர்.

பொதுவாக டெல்லியில்  ஆளும் கட்சி தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சகஜமாக பேசி பழகுவது வழக்கமான ஒன்று. பொது நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் சந்திகாமல் சென்றது வியப்பை ஏற்படுத்தியது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x