Last Updated : 13 Dec, 2018 11:42 AM

 

Published : 13 Dec 2018 11:42 AM
Last Updated : 13 Dec 2018 11:42 AM

‘மோடியின் தலைமைப் பண்பில் ஒருவரும் சந்தேகத்தை எழுப்பமுடியாது’: பாபா ராம்தேவ் ஆவேசம்

பிரதமர் மோடியின் தலைமைப் பண்பில் ஒருவரும் சந்தேகத்தை எழுப்ப முடியாது என்று யோகா குரு பாபா ராம்தேவ் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெருத்த தோல்விகளைச் சந்தித்த நிலையில் ராம்தேவ் இந்த கூற்றைத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் 'இந்தியப் பொருளாதார கருத்தரங்கு' நேற்று நடந்தது. இதில் யோகா குரு பாபா ராம்தேவ் பங்கேற்றுப் பேசினார். நிகழ்ச்சி முடிந்த பின் நிருபர்களுக்கு பாபா ராம்தேவ் பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துவிட்டதால், மோடியின் தலைமை மீது தொண்டர்களுக்கும், மக்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளதா என நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு ராம்தேவ் பதில் அளிக்கையில், “ பிரதமர் மோடியின் தலைமைப் பண்பின் மீது ஒருவரும் சந்தேகப்பட முடியாது. மற்ற தலைவர்களைப் போல், வாக்குவங்கி அரசியலில் ஈடுபடும் தலைவர் அல்ல அவர்” என்று தெரிவித்தார்.

தேர்தலில் அறிவித்ததுபோல் தனது வாக்குறுதிகளைப் பிரதமர் மோடி நிறைவேற்றிவிட்டாரா என்ற கேள்விக்கு ராம்தேவ் பதில் அளிக்கையில், “ இதுபோன்ற அரசியல்ரீதியான கேள்விகளுக்குப் பதில் அளித்து சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், மோடி குறித்தும், தலைமை குறித்தும் எந்திவிதமாக சந்தேகமும் எழுப்ப முடியாது. தேசத்தைக் கட்டமைக்கும் வகையில் 100 மிகப்பெரிய திட்டங்களை மோடி நிறைவேற்றியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

கறுப்புப் பணம் என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் ஒழிக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்விக்கு ராம்தேவ் பதில் அளிக்கையில், “ பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் அனைத்து பணமும் சமமாக இருக்கிறது. ஆனால், அந்தப் பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் தற்போதுள்ள கேள்வியாகும். வேளாண்மை, சுகாதாரம், கல்வி போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு அந்தப் பணம் பயன்படுத்தப்பட வேண்டும்.

 

தேவையான வசதிகளையும், குறைந்த விலையில் இடமும் செய்து கொடுத்தால், இந்தியா மிகப்பெரிய உற்பத்தி முனையமாக மாறும். பல்வேறு தொழில்நிறுவனங்கள் சிக்கலில் இருக்கும் நிலையில், வங்கிகள் முன்வந்து உதவி செய்ய வேண்டும்

அதேசமயம், உண்மையான நிறுவனங்களைக் கண்டறிந்து வங்கிகள் கடன்களை அளிக்க வேண்டும். விஜய் மல்லையா போன்றோர்களை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும். எங்களுடைய பதஞ்சலி நிறுவனம் 2020-ம் ஆண்டுக்குள் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக மாறும், உலக அளவில் 2025-ம் ஆண்டில் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும்” என பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x