Published : 13 Dec 2018 10:14 AM
Last Updated : 13 Dec 2018 10:14 AM

ராஜஸ்தானில் பாஜகவுக்கு வீழ்ச்சி ஏன்?

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை காங்கிரசிடம் பறி கொடுத்துள்ளது பாஜக. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் வேட்பாளர் ஒருவர் இறந்ததால் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், 6 இடங்களில் வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி, 1 இடத்தில் வென்ற ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது.

73 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானில் வழக்க மாகவே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறும். என்றாலும், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு மீதான மக்களின் அதிருப்தி பாஜக வின் தோல்வியை உறுதிப்படுத்தின. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு களில் எல்லா ஊடகங்களும் ஒரே குரலில் சொன்ன தகவல் ராஜஸ்தானில் பாஜக தோல்வி அடையும் என்பதுதான். தேர்தல் முடிவுகள் அதை உறுதிப்படுத்தி உள்ளன.

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் ராஜஸ்தானில் மக்களுக் கான எந்த வளர்ச்சித் திட்டங்களும் செயல் படுத்தப்படவில்லை. விவசாயிகள் அதிகம் உள்ள மாநிலத்தில் அவர்கள் மீது அரசு அக்கறை காட்டவில்லை. விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. உரங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், கடைசி நேரத்தில் ரூ.50 ஆயிரம் வரையிலான கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படுவதாக வசுந்தரா ராஜே அறிவித்தார். இதனால், ஏமாற்றமடைந்த விவசாயிகள் ஆதரவு காங்கிரசுக்கு திரும்பியது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் ஆதரவும் காங்கிரசுக்கு கிடைத்தது. குஜ்ஜார் என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் கணிசமாக உள்ளனர்.

இடஒதுக்கீடு கேட்டு அவர்கள் போராடி வருகின்றனர். ஆட்சிக்கு வந்தால் குஜ்ஜார் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. மேலும், காங்கிரஸின் மாநில தலைவர் சச்சின் பைலட்டும் இதே சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே, குஜ்ஜார் இன மக்களின் வாக்குகள் காங்கிரசுக்கு கணிசமாக கிடைத்துள்ளது.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் பசுக்களை கடத்தியதாக பலர் தாக்கப்பட்டனர். சில கொலைகளும் கூட நடந்தன. பசுக்களின் பாதுகாப்புக்கு என நாட்டிலேயே முதல்முறையாக பசுபாதுகாப்பு துறை ஏற்படுத்தப்பட்டு ஒடாராம் தேவாசி என்பவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். சிவப்பு நிற தலைப்பாகையுடன் கையில் நீண்ட குச்சியுடன் காணப்பட்ட இவர், அதே தோற்றத்திலேயே அமைச்சரவை கூட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டார். புதிய சொத்துக்கள் வாங்கும்போது பசு வரி என்ற பெயரில் 20 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதுவும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தேர்தலில் சிரோஹி தொகுதியில் சுயேச்சை வேட்பாளரிடம் அமைச்சர் ஒடாராம் தேவாசி சுமார் 10 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த வசுந்தரா ராஜே, எளிதில் அணுகப்பட முடியாதவராக மக்களிடம் இருந்து விலகியே இருந்தார். அவரை சந்திக்க முடியாத கட்சியினரும் அவர் மீது அதிருப்தியில் இருந்தனர். போதாக்குறைக்கு பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் வசுந்தராவுக்கும் யார் பெரியவர் என்ற பனிப்போர் வேறு. எல்லாம் சேர்ந்து பாஜக ஆட்சியை கவிழ்த்து விட்டன. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x