Published : 13 Dec 2018 10:13 AM
Last Updated : 13 Dec 2018 10:13 AM

ம.பி.யில் காங்கிரஸுக்கு ‘கை’ கொடுத்த கிராமங்கள்: கூடுதல் வாக்குகளைப் பெற்றும் ஆட்சியை பறிகொடுத்த பாஜக

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் இழுபறி நிலவும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

குறிப்பாக, பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் இருவேறு விதமாக கருத்து கணிப்புகள் வெளியாகின.

இந்த கணிப்புகளை மெய்யாக்கும் வகையில், நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கையின்போது, பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்தன. நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அக்கட்சிக்கு மொத்தம் உள்ள 230-ல் 114 இடங்கள் கிடைத்துள்ளன.

இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த 2013 சட்டப்பேரவைத் தேர்தலில் 165 இடங்களில் வென்ற பாஜக, இந்த முறை 109 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. எனினும், மிக சொற்ப வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் பலர் தோல்வியை சந்தித்தனர்.

இந்தத் தேர்தலில், பாஜக காங்கிரஸ் கட்சியைவிட 0.1 சதவீதம் கூடுதல் வாக்குகளைப் பெற்ற போதிலும் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. அதாவது காங்கிரஸ் 40.9% வாக்குகளையும் பாஜக 41% வாக்குகளையும் பெற்றுள்ளன. எனினும் 2013 பேரவைத் தேர்தலைவிட பாஜகவின் வாக்கு சதவீதம் சுமார் 4 சதவீதம் குறைந்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலைவிட (54%) 13 சதவீதம் குறைந்துள்ளது.

ம.பி.யில் தொடர்ந்து 3 முறை ஆட்சியில் இருந்ததால், பாஜக அரசுக்கு எதிரான மனநிலை நிலவியது. குறிப்பாக, வியாபம் உள்ளிட்ட ஊழல் புகார்கள் பெரும் பிரச்சினையாக உருவெடுத்தன. மேலும் கடந்த ஆண்டு மான்ட்சரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனால் சிவராஜ் சிங் சவுகான் அரசு மீது விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இதுபோன்ற காரணங்கள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தின. மேலும் கிராமப்புறங்களில் பாஜகவுக்கு சுமார் 80 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. எனினும், நகர்ப்புறங்களில் காங்கிரஸைவிட பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தன.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை ஊரக பகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இப்பகுதிகளில் சுமார் 100 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. ஆனால் நகர்ப்புறங்களில் குறைவான இடங்களே கிடைத்தன.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிராமப்புற மக்கள் மத்தியில் குறிப்பாக விவசாயிகள் மத்தியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதுதவிர, விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், பெண் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இதுவும் அக்கட்சிக்கு சாதகமான அம்சமாக மாறியது.

மேலும் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், கட்சியின் மூத்த தலைவர்கள் கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கருத்து வேறுபாடுகளை மறந்து தீவிரமாக களப்பணியாற்றியதும் அக்கட்சிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x