Last Updated : 11 Dec, 2018 05:32 PM

 

Published : 11 Dec 2018 05:32 PM
Last Updated : 11 Dec 2018 05:32 PM

ம.பி.யில் எந்தக் கட்சிக்கும் தனிமெஜாரிட்டி இல்லை? கிங் மேக்கர்கள் மாயாவதி, அகிலேஷ்

மத்தியப் பிரதேசத்தில் கிங் மேக்கர்களாக மாயாவதி மற்றும் அகிலேஷ் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு ஆட்சி அமைக்கத் தேவையான 116 தொகுதிகள் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

ம.பி.யில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இங்கு ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு இடையே நேரடிப்போட்டி நிலவியது. பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி உள்ளிட்ட சில மாநிலக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டிருந்தன.

இதில் எவரும் எதிர்பாராத வண்ணம் ம.பி.யின் தேர்தல் முடிவுகள் புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. இங்கு ஆட்சி அமைக்கத் தேவையான 116 தொகுதிகளின் வெற்றி காங்கிரஸ், பாஜகவிற்கு கிடைக்கவில்லை. அவற்றில் எந்தக் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பதும் கடும் இழுபறியில் உள்ளது.

தற்போதைய கடைசிக்கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, காங்கிரஸ் 114, பாஜக 108, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட இதர கட்சிகள் ஏழு தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றன. இதனால், பாஜக, காங்கிரஸ் இருவரில் ஒருவர் தம் ஆட்சி அமைக்க இதர கட்சிகளின் உதவியை நாட வேண்டி இருக்கும்.

இதர கட்சிகளில் அதிக தொகுதிகளாக மூன்றில் பகுஜன் சமாஜ் முன்னணி வகிக்கிறது. இரண்டில் சமாஜ்வாதி முன்னிலையில் உள்ளது. கோண்டுவானா கன்தந்திரக் கட்சி மற்றும் ஒரு சுயேச்சை ஒரு இடத்தில் வெற்றி பெறும் நிலை தெரிகிறது.

எனவே, தான் ஆட்சி அமைக்க வேண்டி காங்கிரஸ் மாயாவதி மற்றும் அகிலேஷ் சிங்கிடம் ஆதரவு கேட்கத் தொடங்கியுள்ளனர். கோண்டுவானா கன் தந்திரக் கட்சியும் காங்கிரஸை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அம்மூன்று கட்சிகளுமே பாஜகவிற்கு எதிராகப் போட்டியிட்டவை என்பது காரணம்

இதனிடையே, மாயாவதி எக்காரணத்தைக் கொண்டும் பாஜகவிற்கு தம் ஆதரவை அளிக்க முடியாது என அறிவித்துள்ளார். அவர் சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் சிங்குடன் இணைந்து காங்கிரஸுக்கு ஆதரவளிப்பது குறித்து பேசிவருவதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம், மிகவும் குறைந்த தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தும் மாயாவதி மற்றும் அகிலேஷ், கிங் மேக்கர்களாக ம.பி.யில் உருவெடுத்துள்ளனர். இவ்விரு கட்சிகளுக்கும் அந்த தொகுதிகள் காங்கிரஸில் இருந்து பிரிந்த வாக்குகளால் கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x