Last Updated : 11 Dec, 2018 01:19 PM

 

Published : 11 Dec 2018 01:19 PM
Last Updated : 11 Dec 2018 01:19 PM

15 ஆண்டு ஆட்சியை இழக்கும் பாஜக; சத்தீஸ்கரில் அரியணை ஏறும் காங்கிரஸ்: பாஜக தோற்பது மகிழ்ச்சி - அஜித் ஜோகி

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் , கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது. ஆளும் கட்சியான பாஜக 22 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்ட பின் 2000 முதல் 2003-ம் ஆண்டுவரை மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது அஜித் ஜோகி முதல்வராக இருந்தார். அதன்பின் 2003 முதல் 2018-ம் ஆண்டு வரை பாஜக வெற்றி பெற்று தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு முதல்வராக ராமன் சிங் இருந்து வருகிறார்.

இந்நிலையில், 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது. 76.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிந்ததையடுத்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, அஜித் ஜோகி தலைமையிலான ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர், கோண்ட்வானா கண்ட்தந்திரா கட்சி ஆகியவை போட்டியிட்டன.

தேர்தலில் மாயாவாதியுடன் இணைந்து அஜித் ஜோகி போட்டியிட்டதால், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து அனைத்து கணிப்புகளையும் உடைத்து எறிந்து காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது.

காலையில் இருந்து தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டதில் இருந்து காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. தேர்தல் ஆணைய இணையதளத்தின்படி, காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளிலும், பாஜக 22 தொகுதிகளிலும், அஜித் ஜோகி கட்சி 5 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது.

சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்க 46 உறுப்பினர்கள் இருந்தால் போதுமானது. ஆனால், காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் முன்னிலை வகிப்பதால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆளும் பாஜகவில் அமைச்சர்களாக இருந்த பிரிஜ்மோகன் அகர்வால், கேதார் காஷ்யப், மகேஷ் காக்டா, தயால்தாஸ் பாகெல், அமர் அகர்வால் ஆகியோர் தோல்வி முகத்தை நோக்கிச் சென்றுள்ளனர்.

அதேசமயம், பாஜக மாநிலத் தலைவர் தரம்லால் கவுசிக், காங்கிரஸ் மாநிலத் தலைவர் பூபேஷ் பாகெல் ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.

மார்வாஹி தொகுதியில் அஜித் ஜோகியும், அவரின் மனைவி ரேணு ஜோகி கோட்டா தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.

தேர்தல் முடிவு குறித்து ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜே) கட்சித் தலைவர் அஜித் ஜோகி கூறுகையில், “ சத்தீஸ்கர் தேர்தல் முடிவுகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் முடிவை வரவேற்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ராமன் சிங் ஆட்சியை மக்கள் அகற்ற முடிவு செய்து விட்டார்கள். இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் என்னுடைய கட்சி 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பாஜக மாநிலத்தில் தோல்வி அடைந்தது குறித்த தேர்தல் முடிவுகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x