Published : 11 Dec 2018 11:37 AM
Last Updated : 11 Dec 2018 11:37 AM

2-வது முறையாக தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்கிறது டிஆர்எஸ் கட்சி

தெலங்கானா மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் 2-வது முறையாக ஆட்சி அமைக்கும் சூழல் நிலவியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 119 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில், தற்போது டிஆர்எஸ் கட்சி 90 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் இருந்து வருகிறது. ஆதலால், அந்த டிஆர்எஸ் கட்சி 2-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. முதல்வராக சந்திரசேகர் ராவ் உள்ளார். இவரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுவரை இருக்கும்முன் முன்கூட்டியே சட்டப்பேரவையைக் கலைத்து தேர்தலைச் சந்தித்தார். கடந்த 7-ம் தேதி 119 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

ஆளும் டிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக, எம்ஐஎம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் டிஆர்எஸ் கட்சிக்கு ஆதரவாக எம்ஐஎம் கட்சி செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சியும், தெலங்கு தேசம் கட்சியும் இணைந்து செயல்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கியதில் இருந்தே டிஆர்எஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. தற்போதுவரை 92 இடங்களில் டிஆர்எஸ் கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருகின்றனர்.

இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. எம்ஐஎம் கட்சி 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

கஜ்வால் தொகுதியில் போட்யிட்ட டிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் 5-வது சுற்று முடிவில் 9,212 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.

அவரின் மகன் கே.டி.ராமா ராவ் சிர்சில்லா தொகுதியில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திர ரெட்டியைக் காட்டிலும் 15 ஆயிரத்து 96 வாக்குகள் முன்னிலையுடன் ராமா ராவ் இருக்கிறார்.

மேலும், சித்திப்பேட் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் டி ஹரிஸ் ராவ், தெலங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.

தெலங்கானாவில் ஆட்சி அமைக்க 60 உறுப்பினர்கள் இருந்தாலே போதுமானது என்ற சூழலில் தற்போது டிஆர்எஸ் கட்சி 90 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால், 2-வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

டிஆர்எஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், அந்தக் கட்சியின் தொண்டர்கள் கட்சி அலுவலகம் முன் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x