Last Updated : 11 Dec, 2018 09:19 AM

 

Published : 11 Dec 2018 09:19 AM
Last Updated : 11 Dec 2018 09:19 AM

உர்ஜித் படேல் ராஜினாமா நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அடி: மன்மோகன் சிங் வேதனை

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் திடீரென ராஜினாமா செய்தது, நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அடியாகும், இது துரதிருஷ்டவசமானது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேதனைத் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னராக நியமிக்கப்பட்டிருந்த உர்ஜித் படேல் திடீரென நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ரிசர்வ் வங்கி வாரியக்குழுக் கூட்டம் நடக்க இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில் அவர் ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் பதவிக்காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் முன்பே சொந்தக் காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக உர்ஜித் படேல் அறிவித்தார்.

கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே உரசல் போக்கு இருந்தது. இதன் உச்சக் கட்ட வெளிப்பாடாகத்தான் உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ரிசர்வ் வங்கியின் அடிப்படை கட்டமைப்பை மோடி தலைமையிலான அரசு சிதைக்க எடுத்த முயற்சியின் அறிகுறியாகவே, உர்ஜித் படேலின் திடீர் ராஜினாமாவை பார்க்கிறேன்.

குறுகிய கால அரசியல் நலனுக்காக, அரசின் மதிப்பு மிக்க நிறுவனங்களை அழிக்க முயல்வது மிகப்பெரிய முட்டாள்தனமாக இருக்கும்.

உர்ஜித் படேல் ராஜினாமா செய்துவிட்டார் என்கிற செய்தி எனக்கு மிகப்பெரிய வேதனையைத் தருகிறது. அவரின் ராஜினாமா பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடியாகும். நாட்டின் பொருளாதாரம் பல்வேறு சிக்கல்களைசந்தித்து வரும் சூழலில், அவரின் ராஜினாமா பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மிகச்சிறந்த பொருளாதார நிபுணராக, இந்திய அரசின் நிதி அமைப்புகள் மீது அக்கறை கொண்டவராக, பொருளாதார கொள்கைகளை நன்கு கட்டமைக்கும் திறமை உள்ளவராக உர்ஜித் படேல் விளங்கினார்.

மிகப்பெரிய நிறுவனங்களைக் கட்டமைக்க நீண்டகாலம் தேவைப்படும், ஆனால், சனநேரத்தில் அதை அழித்துவிடமுடியும். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ரிசர்வ் வங்கி உள்ளிட்ட மதிப்பு மிக்க நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன. அதைக் குறுகிய அரசியல் லாபத்துக்காக அழிக்க நினைப்பது முட்டாள்தனம்.

ரிசர்வ் வங்கியின் கூடுதல் கையிருப்பை மத்திய அரசு கேட்பதாக துணை கவர்னர் விரால் ஆச்சார்யா கூறியிருந்தார். ரிசர்வ்வங்கி கவர்னர் ராஜினாமா செய்யமாட்டார் என்று எண்ணி இருந்தநேரத்தில் அது நடந்து விட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x