Last Updated : 11 Dec, 2018 08:43 AM

 

Published : 11 Dec 2018 08:43 AM
Last Updated : 11 Dec 2018 08:43 AM

மத்தியில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்: ராகுல் காந்தி சூளுரை

2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார்.

அசோசியட் ஜர்னல் நிறுவனத்தின் சார்பில் 'நவஜீவன்' இந்தி பத்திரிகையின் பதிப்பு நேற்று வெளியிடப்பட்டது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர் மோதி லால் வோரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது:

2019-ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தி, ஆட்சியில் இருந்து அகற்றுவோம். மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு நாட்டின் அச்சுறுத்தலான சூழலை உருவாக்கி இருக்கிறது, ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஊடகங்கள் கபளீகரம் செய்யப்பட்டு, ஆட்சியில் உள்ளவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்பவர்களை மட்டும் ஒளிபரப்ப நிர்ப்பந்திக்கப்படுகின்றன. ஆனால், நவஜீவன் பத்திரிகை என்பது சுயாட்சியுடன் செயல்படும். காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டைக் கூட விமர்சிக்கும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெளிப்படையாக வந்து, தாங்கள் பணியாற்ற முடியாத சூழல் இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். மோடி ராணுவத்தை சுயத்துக்காக பயன்படுத்துகிறார் என்று ராணுவ ஜெனரல்கள் குற்றம்சாட்டுகிறார்கள். தேர்தல் ஆணையம் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த நிறுவனங்களைப் பாதுகாக்க காங்கிரஸ் கட்சி பாடுபடும். நாங்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவைப் போல் அல்ல.

மத்தியில் அதிகாரத்தில் உள்ளவர்கள், நாட்டில் நிலவும் வேலையின்மை பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றில் கவனம் செலுத்த ஊடகங்களை அனுமதிப்பதில்லை. இதனால், பாஜகவுக்கு எதிராக மக்கள் மத்தியில் கோபம் அதிகரித்துள்ளது. ஆனால், இதைக்கூட ஊடகங்கள் வெளியிடவில்லை.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x