Last Updated : 11 Dec, 2018 07:38 AM

 

Published : 11 Dec 2018 07:38 AM
Last Updated : 11 Dec 2018 07:38 AM

5 மாநில தேர்தலில் வாக்காளருக்கு தர முயன்ற லஞ்சத்தின் மதிப்பு இருமடங்காக உயர்வு: முதன்முறையாக சிக்கிய போதைப்பொருள்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளருக்கு அளிக்க முயன்ற லஞ்சத்தின் மதிப்பு ரூ.300 கோடி என தெரியவந்துள்ளது. லஞ்சத்தின் மதிப்பு சுமார் இருமடங்காக உயர்ந்துள்ளது. முதன்முறையாக போதைப்பொருட்களும் சிக்கி யிருப்பது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த நவம்பர் 12-ல் துவங்கி டிசம்பர் 7-ல் முடிந்தது. இன்று முடிவுகள் வெளியாகின்றன. இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் அளிக்க முயன்ற பணத்தின் மொத்த மதிப்பு ரூ.300 கோடி. ரொக்கமாக பறிமுதலான ரூ.170 கோடியில் தெலுங்கானாவில் மிக அதிகமாக ரூ.115 கோடி கிடைத்துள்ளது. பிளாட்டினம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களின் மொத்த மதிப்பு ரூ.25.39 கோடி. ரூ.53.51 கோடி மதிப்பிலான 17.29 லட்சம் லிட்டர் மது பாட்டில்கள், வாகனங்கள், சட்டவிரோதமான ஆயுதங்கள் மற்றும் இதர பொருட்களின் மதிப்பு ரூ. 31.35 கோடி ஆகும். சத்தீஸ்கரில் மட்டும் கடந்த 2013-ல் நடைபெற்ற தேர்தலை விடக் குறைவான தொகையே பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளருக்கு கொடுக்க முயன்ற லஞ்சத் தொகை மற்ற நான்கு மாநிலங்களில் கடந்த முறையை விட சுமார் இருமடங்காக உயர்ந்துள்ளது.

இவற்றில் இதர பொருட்கள் பட்டியலில் முதன்முறையாக கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்களும் சிக்கியுள்ளன. ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து பறிமுதலான போதைப் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.16.85 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் மத்திய தேர்தல் ஆணைய வட்டாரத்தினர் கூறும்போது, ‘‘இதுவரையிலான தேர்தல்களில் மது பாட்டில்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு வந்த நிலையில், போதைப் பொருட்களும் இப்போது சிக்கியிருப்பது கவலைக்குரியது. பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகும் ரொக்கமாக விநியோகிக்கப்படும் கறுப்புப்பணம் குறையவில்லை’’ எனத் தெரிவித்தனர்.

போதைப் பொருட்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மத்திய வருவாய் உளவுத்துறை விசாரிக்கத் துவங்கி உள்ளது. இதன் விசாரணையில், மது தவிர மற்ற அனைத்து போதைப் பொருட்களும் சீனாவில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்கள் வழியாக கடத்தப்பட்டு வந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x