Published : 10 Dec 2018 04:13 PM
Last Updated : 10 Dec 2018 04:13 PM

மோடி அரசில் அமைச்சரவைதான் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளானது: யஷ்வந்த் சின்ஹா தாக்கு

பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு நாட்டில் பல்வேறு நிறுவனங்களை சிதைத்தநிலையில் அதில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டது அமைச்சரவைதான் என்று பாஜக முன்னாள் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் “ஐடியா ஆப் பெங்கால்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் முன்னாள் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி முக்கியமான மசோதாக்கள் விவாதத்தின் போதும், நிறைவேற்றும்போது, மாநிலங்கள் அவை குறித்து குறைத்து மதிப்பிடுகிறார். மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களையும், அமைப்புகளையும் மோடி தலைமையிலான அரசு சிதைத்து விட்டது. இதில் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளானது மத்திய அமைச்சரவைதான்.

எதற்காக இப்படிச் சொல்கிறேன் என்றால், முக்கியமான முடிவுகள் அனைத்தும் மத்திய அமைச்சரவையின் ஆலோசனை செய்யாமலே எடுக்கப்பட்டுள்ளது. அது ரஃபேல் போர் ஒப்பந்தமாக இருக்கட்டும், அல்லது பண மதிப்பிழப்பு நடவடிக்கையாக இருக்கட்டும் எதுவும் அமைச்சரவையிடம் ஆலோசிக்கப்படவில்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கும் செயலாகும். பொருளாதார கொள்கையின் தோல்விகளை மறைப்பதற்காக, பொருளாதார புள்ளிவிவரங்களை அழகுபடுத்தியும், உயர்த்தியும் வெளிக்காட்ட முயற்சிக்கிறது.

முதலில் மத்திய அரசு, ஜிடிபி கணக்கிடும் முறையைச் சேதப்படுத்தியது. கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இப்போதுள்ள பாஜக அரசைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டது ஆனால், அந்த அரசில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டுவிட்டன.

அதற்கு மாறாக இப்போதுள்ள பாஜக அரசு வைத்துள்ள புள்ளிவிவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதுபோல் காட்டப்படுகிறது. அனைத்து விதமான தவறுகளுக்கும் கடந்த கால அரசுகளைக் குறை சொல்வதையே மோடியின் அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது.

2014-ம் ஆண்டு வாராக்கடன் குறித்து விவரங்களை அப்போதைய அரசு வெளியிட்டது. இப்போது, 2018-ம் ஆண்டு புதிய விவரங்களுடன் பாஜக அரசு வந்து கடந்த கால அரசைக் குறைகூறி வருகிறது.

இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x