Last Updated : 10 Dec, 2018 03:42 PM

 

Published : 10 Dec 2018 03:42 PM
Last Updated : 10 Dec 2018 03:42 PM

பிரதமர் வேட்பாளர் யாரென்று சொல்லுங்கள்?-எதிர்க்கட்சியின் கூட்டத்தைக் கிண்டல் செய்த பாஜக

எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதும், பிரதமர் மோடியை வெளியேற்றுவதும் இருக்கட்டும், முதலில் பிரதமர் வேட்பாளர் யாரென்று அவர்களால் கூற முடியுமா என்று எதிர்க்கட்சிகளை பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா கிண்டல் செய்துள்ளார்.

2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் திரண்டு வருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் குஷ்வாலா வெளியேறியுள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலைச் சந்திக்கும் வகையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மாலையில் நடத்துகின்றன.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் மிகப்பெரிய அணியைத் திரட்டும் முயற்சியில் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அனைத்துக்கட்சிக் கூட்டம் குறித்து பாஜகவின் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா கூறுகையில், “எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக ஒன்று திரள்வது பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், முதலில் எதிர்க்கட்சிகள் தங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கட்டும். எங்களிடம் பிரதமர் மோடி உள்ளார், எதிர்க்கட்சிகள் யாரைப் பிரதமராக நிறுத்தப்போகிறார்கள்” எனக் கிண்டல் செய்தார்.

இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியும் பங்கேற்க உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் கூறுகையில், “மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் மம்தாவுக்கு எதிராகச் செயல்படுகின்றன. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மம்தா பங்கேற்கச் செல்கிறார். உண்மையில் மம்தாவுக்கு காங்கிரஸும், கம்யூனிஸ்டும் எதிரிகளா அல்லது நண்பர்களா எனத் தெரியவில்லை. கடந்த 1988-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உதயமானபோது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு எதிரிகள் என்று மம்தா பேசினார். ஆனால், இப்போது நண்பர்களாகிவிட்டார்களா “ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x