Published : 10 Dec 2018 03:26 PM
Last Updated : 10 Dec 2018 03:26 PM

விஜய் மல்லையாவுக்காக தயாராகும் தீவிரவாதி அஜ்மல் கசாப் சிறை: மும்பை ஆர்தர் ரோட்டில் ஏற்பாடுகள் தீவிரம்

விஜய் மல்லையா இந்தியா அழைத்து வரப்பட்டால் அவரை அடைப்பதற்காக மும்பை ஆர்தர் ரோட்டில், அஜ்மல் கசாப் அடைக்கப்பட்டிருந்த உயர் பாதுகாப்பு கொண்ட சிறை தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்திய வங்கிகளில் கிங்பிஷர் நிறுவன தொழிலதிபர் மல்லையா ரூ. 9,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்றார். அமலாக்கத் துறையும், சிபிஐயும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருடைய சொத்துக்களை முடக்கியது.

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவதற்கான வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  இந்த வழக்கில், டிசம்பர் 10-ம் தேதியான இன்று இறுதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறத.

இறுதித் தீர்ப்பு நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீ ரென்று தான் வாங்கிய கடனை 100 சதவீதம் வட்டியில்லாமல் திருப்பித் தருவதாகவும், அரசும் வங்கிகளும் தயவு செய்து இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

விஜய் மல்லையாவை இந்தியா அனுப்புவதற்கு எந்தத் தடையுமில்லை என்று தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே எந்த நேரமும் அவர் இந்தியா திரும்புவதற்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்லப் படுகிறது.

இதையடுத்து அவர் இந்தியா அழைத்து வரப்பட்டால் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அவரை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவரத்தை ஏற்கெனவே லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சிறையின் புகைப்படங்கள் லண்டன் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன.

ஆனால் மும்பை சிறைச்சாலை மிக மோசமாக இருப்பதாக விஜய் மல்லையா சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலை புகைப்படங்களை பார்த்த நீதிபதி, அதனை பார்த்து முடிவெடுக்க முடியவில்லை எனக் கூறினார். புகைப்படங்கள் தெளிவாக இல்லாததால் சிறை உட்புறத்தை தெளிவாக தெரிந்து கொள்ளும் வகையில் வீடியோவை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு கூறினார். இதைத் தொடர்ந்து சிபிஐ சார்பில் வீடியோவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில் விஜய் மல்லையா எந்தநேரத்திலும் இந்தியா அழைத்து வரப்படலாம் என்பதால் ஆர்தர் ரோடு சிறைச்சாலையை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வளாகத்தில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டு இருந்தார். முழுக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள இந்த சிறைபகுதியில் பலத்த பாதுகாப்பு கொண்டது. இதுமட்டுமின்றி இங்கு அடைக்கப்படும் கைதிக்கு உடனடியாக மருத்துவசதி வழங்க மருத்துவர்கள் உள்ளி்டட ஏற்பாடுகள் உள்ளன.

தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ பாதுகாப்பும் இந்த சிறையில் உள்ளது. இந்த பாதுகாப்பு அம்சம் கொண்ட சிறையில் தான் விஜய் மல்லையா அடைக்கப்பட உள்ளார். விஜய் மல்லையா அழைத்து வரப்பட்டால் உடனடியாக அவரை சிறையில் அடைக்கும் வண்ணம் சிறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x