Published : 10 Dec 2018 08:10 AM
Last Updated : 10 Dec 2018 08:10 AM

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவர வேண்டும்: விஸ்வ இந்து பரிஷத் கூட்டத்தில் வலியுறுத்தல்; டெல்லி பேரணியில் 5 லட்சம் பேர் திரண்டனர்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நேற்று நடந்த மெகா பேரணியில் சுமார் 5 லட்சம் பேர் திரண்டனர். ராமர் கோயில் கட்ட நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தில் மசோதா கொண்டுவர வேண்டும் என்று ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில் வலியுறுத் தப்பட்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்புகள் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கிவிட்டன. இந்து அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமின்றி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் என்று கூறி வருகிறார். இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் அயோத்தி பிரச்சினை முக்கியமானதாக இருக்கும் என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது. ராமர் கோயில் கட்டும் தேதியை ஜனவரி மாதம் அறிவிப்போம் என்று அயோத்தியில் கடந்த மாதம் 25-ம் தேதி நடந்த தர்மசபைக் கூட்டத்தில் துறவிகள் அறிவித்தனர்.

இந்நிலையில், அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் டெல்லியில் பிரம்மாண்ட பேரணி யும் பொதுக்கூட்டமும் நேற்று நடைபெற்றது. பேரணியில் சுமார் 5 லட்சம் பேர் கலந்துகொண்டு ஊர்வலமாகச் சென்றனர். ராம்லீலா மைதானத்தில் தர்மசபைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான துறவிகள், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

ராமர் கோயில் கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ராமர் கோயில் கட்ட மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் பல்வேறு துறவிகளும் பேசினர்.

விஸ்வ இந்து பரிஷத்தின் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் பேசும்போது, ‘‘உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று விரும்புகின்றனர். இங்கு லட்சக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் கூடியுள்ளனர். ராமர் கோயில் கட்ட நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மசோதா கொண்டுவர வேண்டும். இங்கு கூடியுள்ள பிரம்மாண்ட கூட்டம், மசோதா கொண்டுவர விருப்பம் இல்லாதவர்களின் இதயங்களை நிச்சயம் மாற்றும்’’ என்றார்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த தலைவரான சுரேஷ் பய்யாஜி ஜோஷி பேசும்போது, ராமர் கோயில் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை, மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் பேசும்போது, ‘‘ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் கருத்து களை கவனித்து அதற்கு மதிப்பளிக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். சர்ச்சைக்குரிய அதே இடத்தில்தான் ராமர் கோயில் கட்ட வேண்டும். ராமர் கோயில் கட்டுவோம் என்று சொல்லித்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. வாக்குறுதியை பாஜக நிறைவேற்ற வேண்டும். ராமர் கோயில் கட்டுவதற்கு சட்டம் கொண்டுவர வேண்டும். அதைத் தவிர வேறு வழியில்லை’’ என்றார்.

தர்மசபைக் கூட்டத்தை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. லட்சக் கணக்கான மக்கள் திரண்டதால் ஜவஹர்லால் நேரு சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வேறு பாதைகளில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில், விஸ்வ இந்து பரிஷத்தின் பிரம்மாண்ட கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதிகளில் தர்மசபைக் கூட்டம் நடத்தப்படும் என்றும், ராமர் கோயில் கட்டும் தேதி குறித்து அந்த கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் விஸ்வ இந்து பரிஷத் ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக முழு ஆதரவு

இதற்கிடையே, தர்ம சபைக்கு முழு ஆதரவு தரு வோம் என்று பாஜக அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான கேசவ பிரசாத் மவுரியா கூறியதாவது:

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள இந்துக் களின் விருப்பமாக உள்ளது. தர்மசபைக்கு முழு ஆதரவு தருவோம். தர்மசபையை யாரும் தடுக்க முடியாது. ராமர் இந்துக்களின் பண்பாட்டு அடையாளச் சின்னம். அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். இந்த பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை எல்லா தரப்பினரும் காத்திருந்தால் நல்லது. நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு விசாரணையில் தீர்ப்பு தாமதமாவதற்கு காங்கிரஸ்தான் காரணம். ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டும் என்று பாஜக தெளிவாக கூறுகிறது. ஆனால், ராமர் கோயில் கட்டலாமா, கூடாதா என்றும், இந்தப் பிரச்சினையில் தனது நிலைப்பாடு என்ன என்பதையும் மக்களுக்கு காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு கேசவ பிரசாத் மவுரியா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x