Last Updated : 09 Dec, 2018 06:11 PM

 

Published : 09 Dec 2018 06:11 PM
Last Updated : 09 Dec 2018 06:11 PM

டெல்லியில் திரண்ட விஎச்பி தொண்டர்கள்: மக்களின் குரலைக் கேளுங்கள்: பையாஜி ஜோஷி ஆவேசம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்குத் தனியாக சட்டம் இயற்றி, தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்ற வேண்டும். ஆட்சியாளர்கள் மக்களின் குரலைக் கேட்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் பையாஜி ஜோஷி ஆவேசமாகப் பேசினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பாஜக தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது. ஆனால், ஆட்சி முடியும் தருவாயில் இருப்பதோடு, அயோத்தி விவகார வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், எந்த முடிவும் எடுக்க முடியாமல் மத்திய அரசு உள்ளது.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தனியாக சட்டம் இயற்ற வேண்டும், வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இதை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி அயோத்தியில் கடந்த இரு வாரங்களுக்கு முன் விஎச்பி சார்பில் தர்ம சபா கூட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், ராமர் கோயில் கோரிக்கை டெல்லியில் ஒலிக்க வேண்டும் என்ற நோக்கில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம்லீலா மைதானத்தில் இன்று தர்ம சபா கூட்டம் நடந்தது. காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம் மாலை 4 மணிக்கு முடிந்தது. விஸ்வ இந்து பரிஷத், இந்துமத ஆர்வலர்கள், சாதுக்கள், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், வலது சாரி அமைப்பினர் என ஆயிரக்கணக்கில் மைதானத்தில் திரண்டனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட விரைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், குளிர்காலக் கூட்டத்தொடரில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினார்கள்.

கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் பையாஜி ஜோஷி பேசுகையில், “ இன்று மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். மக்களின் குரலைக் காது கொடுத்துக் கேட்டு, அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் மத்திய அரசிடம் பிச்சைகேட்கவில்லை. எங்களின் உணர்வுகளைத் தெரிவிக்கிறோம். இந்த நாட்டுக்கு ராமர் ஆட்சி தேவை.

இந்த நாடு நீதித்துறையின் மீது அவநம்பிக்கையோடு இருந்தால், வளர்ச்சியின் பாதையில் செல்ல முடியாது. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, உச்ச நீதிமன்றம் விரைவாக நீதி வழங்க வேண்டும்.

நாங்கள் எந்த மதத்தினருடனும் மோதல்போக்கைக் கடைப்பிடிக்கவில்லை. சட்டத்தை உருவாக்கி, ராமர் கோயில் கட்டுங்கள் என்று வலியுறுத்துகிறோம். வாக்குறுதியை நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் “ என பையாஜி ஜோஷி தெரிவித்தார்.

விஎச்பி தலைவர் விஷ்ணு சதாஷிவ் கோக்ஜே கூறுகையில், ''அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்ட விரும்புகிறோம் என்று தவறாக சிலர் நினைக்கிறார்கள். கோயில் இடிக்கப்பட்ட பின்புதான் மசூதி அங்கு கட்டப்பட்டுள்ளது. தேர்தலுக்காக ராமர் கோயில் விவகாரத்தை எழுப்புகிறோம் என்பது தவறாகும். ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை நாட்டில் எங்காவது தேர்தல் நடைபெறுகிறது. நாங்கள் அமைதியாக இருந்துவிட்டோம் என்று அர்த்தமல்ல” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x