Published : 28 Nov 2018 12:54 PM
Last Updated : 28 Nov 2018 12:54 PM

அந்தமான் தீவில் உயிரிழந்த அமெரிக்க இளைஞரின் டைரிக் குறிப்புகள்

அந்தமான் தீவில் பழங்குடியினரால் கொல்லப்பட்ட அமெரிக்க இளைஞரைப் பற்றி அவரது நண்பர் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபர் தீவுகள் பகுதியில் வடக்கு சென்டினல் தீவு உள்ளது. அங்கு பழங்குடியின மக்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளாக வெளியுலகத் தொடர்பு இல்லாமல் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தங்கள் பகுதிக்குள் வெளியாட்கள் யாரையும் அனுமதிப்பதில்லை என நம்பப்படுகிறது. இதையும் மீறி அங்கு சென்ற சிலரை அவர்கள் கொன்றுவிட்டதுடன் அவர்களுடைய உடலை மீட்கவும் அனுமதித்ததில்லை.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலென் சாவ் (26) என்ற இளைஞர், அந்த மக்களைத் தொடர்புகொள்வதற்காகவும் கிறிஸ்தவ மதத்தை போதிக்கவும் சமீபத்தில் அங்கு சென்றார். ஆனால் கடந்த 17-ம் தேதி பழங்குடியின மக்கள் ஜானைக் கொன்றுவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஜானின் சாகச முயற்சி குறித்து அவரது அந்தமான் நண்பர் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது தவிர வாஷிங்டன் போஸ்டிடம் கிடைத்துள்ள ஜானின் டைரி குறிப்புகளும் சுவாரஸ்யம் நிறைந்ததாக உள்ளன.

இன்ஸ்டாகிராமில், ஜான் சாவ் துள்ளலான சாகச நேசராக பல புகைப்படங்களைப் பகிர்ந்திருப்பத்தை நம்மால் பார்க்க முடியும். ஆனால், யதார்த்தத்தில் அவருக்கு பதின் பருவத்தில் அவர் படித்த அந்தமானின் வடக்கு சென்டினல் பழங்குடிகளைப் பார்க்க வேண்டும் என்பது அணையா நெருப்பாக மனதில் இருந்துள்ளது.

அதனாலேயே எப்படியாவது சட்டவிரோதமாவவது அங்கு பயணித்து அங்குள்ளவர்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற விரும்பியுள்ளார். 

அந்தமானின் ஹேவ்லாக் தீவுகளில் உள்ள ஆழ்கடல் மூழ்கும் உபகரணங்கள் விறபனையகத்தின் உரிமையாளர் ஜான் சாவ் பற்றிய தனது நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

"வடக்கு சென்டினல் பழங்குடிகள் குறித்து அதீத ஆர்வம் கொண்டிருந்தார் ஜான் சாவ். ஆனாலும் எப்போதும் அவர் அந்தப் பழங்குடிகளைப் பற்றியே பேசுவார். ஒருமுறை நான் 2006-ல் இரண்டு மீனவர்கள் அங்கு சென்றதைப் பற்றியும் அவர்களால் அந்த இருவரும் கொல்லப்பட்டதைப் பற்றியும் கூறினேன். இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் ராணுவத்தினர் சென்டினல் பகுதியில் தங்கத்தைப் புதைத்து வைத்ததாகச் சொல்லப்படுவதை நம்பி அந்த மீனவர்கள் அங்கு சென்று உயிரை இழந்தனர் என்றும் சொன்னேன்.

இதையெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை. ஜானுக்கு அங்கு செல்வது மட்டுமே லட்சியமாக இருந்தது. இந்த விஷயத்தில் ஜானுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது என்றுதான் சொல்வேன். ஆனால், இப்படிப்பட்ட சாகசக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்கள்".

இவ்வாறு சோன்ஜி கூறினார்.

சீனாவில் ஏற்பட்ட கலாச்சார புரட்சியின்போது அங்கிருந்து தப்பித்தவர்தான் ஜானின் தந்தை. பின்நாளில் ஜானுக்கு ராப்பின்சன் க்ரூஸோ கதைகள் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. தி சைன் ஆஃப் தி பீவர் என்ற புத்தகத்தைப் படித்த ஜான் சாவ் அதில் வரும் பாத்திரங்களைப் போல் தனது முகத்தை ப்ளூபெர்ரி ஜூஸால் சாயம் பூசிக் கொண்டு கொல்லைப்புறத்தில் வில் அம்பு வைத்து விளையாடியிருக்கிறார். இதை அவரே ஒரு அட்வன்சர் பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

ஆனால் இது குறித்து கருத்து சொல்ல ஜானின் தந்தை பேட்ரிக் மறுத்துவிட்டார்.

ஜானின் நண்பர் ராம்சே சில நினைவலைகளைப் பகிர்ந்தார். "ஜான் 2016-ல் என்னுடன் பெல்லிங்ஹாமில் தங்கியிருந்தார். அப்போது அந்தமான் கடல் பற்றி நிறைய பேசுவார். அங்கு செல்வது பற்றிய திட்டத்தையும் சொல்வார். அதனாலேயே காதல் விவகாரங்களில் சிக்குவதில்லை என்றும் கூறுவார். அங்கு நிறைந்திருந்த ஆபத்தை உணர்ந்திருந்தார். அதன் காரணமாகவே ஒருவேளை அங்கு சென்று தனக்கு ஏதாவது நேர்ந்தால் தன்னைக் காதலிக்கும் பெண் கலங்கக் கூடாது என்பார். அதேவேளையில் சென்டினல் தீவு செல்வது சட்டவிரோதமானது என்பதையும் அவர் தெரிந்து வைத்திருந்தார்" எனக் கூறினார்.

அதே ஆண்டுதான் ஜான், கன்சாஸ் நகரில் உள்ள ஆல் நேஷன்ஸ் என்ற மிஷனரி குழுவில் தன்னை சேர்த்துக் கொண்டார். அந்தக் குழு உலகம் முழுவதும் 40 நாடுகளுக்கு மிஷனரிகளை அனுப்பி வந்தது. அந்த அமைப்பின் சர்வதேச செயற் தலைவர் மேரி ஹோ கூறும்போது, "ஜான் சாவ் துடிப்பான இளைஞர். அவருக்கு யாரும் செல்லாத இடத்துக்குச் செல்ல வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. அதனாலேயே வடக்கு சென்டினல் தீவு அவர் மனதில் இருந்தது. அங்கு சென்று அந்த மக்களுடன் வாழ்ந்து அவர்களது பாஷையை கற்க வேண்டும் என்றும் விரும்பியுள்ளார். ஜான் சாவ் மிஷனரி விசாவில் செல்லவில்லை. அதேவேளையில் சட்டவிரோதமாக பயணிக்கவில்லை" என்றார்.

இதற்கிடையில் இந்தியாவின் பூர்வகுடிகள் மற்றும் வன பாதுகாப்புச் சட்டங்களை ஜான் சாவ் மீறியிருப்பதாக டெல்லியில் உள்ள கொள்கை ஆய்வு மையத்தின் பேராசிரியர் பிரம்மா செல்லானே கூறியுள்ளார்.

அவர் மேலும் பேசும்போது, "இந்தத் தீவில் அவர் அடிக்கடி ஊடுருவியிருக்கிறார். இதனாலே அந்த மக்கள் தங்கள் பொறுமையை இழந்துள்ளனர். நம்பிக்கைக்கும்  மனப்பிறழ்ச்சிக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. அதை உணர ஜான் மறந்துவிட்டார்" என்றார்.

ஜானின் டைரி குறிப்புகள்:

சாவின் டயரி என தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அவரது குடும்பத்தினர் ஒரு குறிபேட்டை கொடுத்துள்ளனர். அதில் அவர் பதிவிட்டிருப்பதில் சில தகவல்கள் தெரியவந்துள்ளன.

அதன்படி, அந்தமான் தீவுகளுக்கு அக்டோபர் 16-ம் தேதி சென்றுள்ளார். நவம்பர் 14-ம் தேதி சில மீனவர்கள் உதவியுடன் கள்ளத்தனமாக சென்டினல் நோக்கிப் பயணித்துள்ளார். மாலை மயங்கும் வேளையில் அவர் பழங்குடிகள் அருகே சென்றுள்ளார். அங்கிருந்த பழங்குடிப் பெண்கள் ஜானைப் பார்த்து பயத்தில் கோஷமிட்டுள்ளனர். அங்கு சில ஆண்கள் கையில் வில் அம்புடன் இருந்துள்ளனர். அவர்களிடம், நான் ஜான். உங்களை நான் நேசிக்கிறேன். இயேசி கிறிஸ்துவும் உங்களை நேசிக்கிறார் எனக் கூறியிருக்கிறார். பின்னர் அங்கிருந்து திரும்பியிருக்கிறார்.

இரண்டாவது நாளில், காயக் மூலம் அங்கு பயணித்திருக்கிறார். பழங்குடிகளிடம் மீன், கத்தரிக்கோல், சேஃப்டி பின், கயிறு போன்ற பொருட்களைக் கொடுக்க முயன்றிருக்கிறார். அப்போது தலையில் மலர் கிரீடம் போன்ற ஒன்றை அணிந்திருந்த ஆண் ஒருவர் ஜானைப் பார்த்து கூச்சலிட்டுள்ளார். ஜான் பதிலுக்கு பாட்டு பாடியுள்ளார். அந்த பழங்குடிவாசிகள் அமைதி அடைந்துள்ளனர். அப்போது இளைஞர் ஒருவர் ஒரு அம்பை எய்து தாக்க அது ஜானின் பைபிளில் பாய்ந்துள்ளது. பின்னர் ஜான் சாவ் சதுப்பு நிலக் காடுகள் வழியாக தப்பித்திருக்கிறார்.

திரும்பி வந்த அவர் தனது டைரி குறிப்பில், "ஆண்டவனே, உங்களது மகிமையை அறியாத இந்தத் தீவுதான் சாத்தானின் கோட்டை" என்று எழுதிவைத்திருக்கிறார்.

மூன்றாவது நாள் அங்கு சென்றபோதே அவருக்கு தனது மரணம் பற்றி தெரிந்திருக்கிறது. அதனாலேயே, "நான் சூரியன் மறைவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அழகாக உள்ளது. அழுகிறேன். இதுதான் நான் பார்க்கும் கடைசி சூரிய அஸ்தமனமா என்று தெரியவில்லை" என எழுதியிருக்கிறார். மீண்டும் மீனவர்களை சென்டினல் பகுதியில் விடுமாறு கூறியிருக்கிறார். அடுத்த நாள் மீனவர்கள் வந்தபோது பழங்குடிகள் ஜான் சாவின் சடலத்தை இழுத்துக் கொண்டிருந்ததையே மீனவர்கள் பார்த்துள்ளனர்.

அந்தமானில் உள்ள ஜானின் நண்பர்களால் அவரது மறைவை இன்னும் நம்ப முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x