Published : 22 Nov 2018 11:41 AM
Last Updated : 22 Nov 2018 11:41 AM

கடவுளே, நான் இறக்க விரும்பவில்லை- அந்தமான் தீவில் பழங்குடியினரால் அம்பெய்திக் கொல்லப்பட்ட அமெரிக்கரின் கடைசிக் கடிதம்

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் பழங்குடியினரால் அம்பெய்திக் கொல்லப்பட்ட 26 வயது ஜான் ஆலி சாவ் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் தான் இறக்க விரும்பவில்லை என்றும் ஒருவேளை கொல்லப்பட்டால் பழங்குடியினர் மீது கோபம் கொள்ள வேண்டாம் என்றும் தனது பெற்றோருக்கு ஜான் எழுதியுள்ளார்.

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ஒன்றான வடக்கு செண்டினல் தீவில் வாழும் பூர்வீகப் பழங்குடியினர் வெளியுலகுடன் தொடர்பற்றவர்கள்.  21-ம் நூற்றாண்டிலும் நவீனமயமடையாத கடைசி பழங்குடி பூர்வீக மனிதர்கள் மூர்க்க குணம் கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இங்கு செல்லவோ, ஆவணப்படம் எடுக்கவோ பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கு கடந்த வாரத்தில் கிறிஸ்தவ மிஷினரியைச் சேர்ந்த ஜான் ஆலி சாவ் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரை மீனவர்கள் சிலர் தீவில் கொண்டுசென்று விட்டுவிட்டுத் திரும்பியுள்ளனர்.

அவர் பழங்குடியினரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற விரும்பியுள்ளார். ஆனால் அவரைப் பழங்குடியினர் அம்பெய்திக் கொன்றுள்ளனர். அத்துடன் அவரின் கழுத்தை கயிறால் இறுக்கித் தொங்கவிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவரின் உடலைக் கடலில் வீசியுள்ளனர்.

 

இந்நிலையில் ஜான் நவ.16-ம் தேதி தனது பெற்றோருக்கு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில், ''உங்களுக்கு நான் மேற்கொள்ளும் செயல்கள் ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆனால் இங்குள்ள மக்களுக்கு யேசுவை அறிமுகப்படுத்துவதை முக்கியமான செயலாக நினைக்கிறேன். ஒரு வேளை நான் கொல்லப்பட்டால், அவர்கள் மேலோ கடவுளின் மேலோ கோபம் கொள்ளாதீர்கள்.

உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்கள். நீங்கள் கர்த்தரை அடையும்போது மீண்டும் உங்களைச் சந்திப்பேன். அதற்கு முன்னால் பழங்குடியினரின் சொந்த மொழியில் யேசு கிறிஸ்துவை அவர்கள் வழிபடுவதைக் காணக் காத்திருக்கிறேன்.

பழங்குடியினர் இரண்டு அம்புகளை எப்போதும் வைத்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து, 'என்னுடைய பெயர் ஜான். உங்களை நேசிக்கிறேன், ஜீசஸ் உங்களை நேசிக்கிறார்!' என்று கத்தினேன்.

அவர்களை நோக்கி மெல்லச் சென்றேன். அவர்கள் ஆக்ரோஷமாகக் கத்த ஆரம்பித்தனர். அவர்கள் சொல்லும் வார்த்தைகளைத் திரும்பச் சொல்ல முயன்றேன். என்னைப் பார்த்து சத்தமாகச் சிரித்தனர்.

அப்போது சிறுவன் ஒருவர் என்னை நோக்கி அம்பெய்தினான். அது நேராக நான் வைத்திருந்த பைபிளில் நிலைகுத்தி நின்றது. கடவுளே, நான் இறக்க விரும்பவில்லை. ஒருவேளை இறந்துவிட்டால் எனது பணியை யார் மேற்கொள்வார்கள்?''

இவ்வாறு அந்தக் கடிதத்தில் ஜான் தெரிவித்துள்ளார்.

பாதுகாக்கப்பட்ட பகுதியான வடக்கு செண்டினல் தீவுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதியில்லை. இதனால் அங்கு வாழும் ஆதித் தொல் பழங்குடியினத்தின் மக்கள் தொகை என்னவென்று தெரியவில்லை. இதே பழங்குடியினர் 2006-ம் ஆண்டில் மீனவர்கள் சிலரை அம்பெய்திக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x