Last Updated : 21 Nov, 2018 01:11 PM

 

Published : 21 Nov 2018 01:11 PM
Last Updated : 21 Nov 2018 01:11 PM

48 மணிநேரத்தில் பதவி விலகுங்கள்; கோவா முதல்வர் இல்லம்நோக்கி 100-க்கும் மேற்பட்டோர் பேரணி

கோவா மாநிலத்துக்கு முழுநேர முதல்வர் தேவை என்பதை வலியுறுத்தி 48 மணிநேரத்தில் முதல்வர் பதவியில் இருந்து மனோகர் பாரிக்கர் விலக வேண்டும் எனக் கோரி மக்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் எனப் பலரும் முதல்வர் இல்லம் நோக்கிச் சென்று போராட்டம் நடத்தினார்கள்.

நிர்வாகத்தை மீட்பதற்கான மக்கள் பயணம் என்ற தலைப்பில் கீழ் நூற்றுக்கும் மேற்பட்டோர் முதல்வர் இல்லம் நோக்கி பேரணியாகச் சென்றபோது போலீஸாரல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கோவா முதல்வராக இருக்கும் மனோகர் பாரிக்கர் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது உடல் நலம் தேறி வருகிறார். ஆனால், வழக்கமான அலுவல் பணிகளை தொடர முடியாததால், அவர் வீட்டில் ஓய்வு எடுத்துவருகிறார். இதனால், கோவா மாநிலத்துக்குக் கடந்த 9 மாதங்களாக முழுநேர முதல்வர் இல்லாத சூழலில் அரசு எந்திரம் இயங்கி வருகிறது.

அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் தங்களிடம் இருக்கும் எம்எல்ஏக்களை வைத்து ஆட்சி அமைக்கவும் முயற்சித்து வருகிறது. ஆனால், இதற்கு பாஜக சம்மதிக்காமல், தொடர்ந்து பாரிக்கரையே முதல்வராக வைத்துள்ளது.

இந்த சூழலில், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் டோனா பாலாவில் உள்ள முதல்வர் மனோகர் பாரிக்கர் இல்லம் நோக்கிச் செல்லும் போராட்டம் நடத்தினர். மேலும், 48 மணிநேரத்தில் கோவா முதல்வராக இருக்கும் மனோகர் பாரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேர முதல்வருக்கு விட்டுத்தர வேண்டும் என்று அந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் வலியறுத்தினர்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடான்கர், முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், சிவசேனா கட்சியினர், கோவா தலைவர்ரகள், சமூக ஆர்வலர்கள், பெண் ஆர்வலர்கள் ஆகியோர் பேரணியாகச் சென்றனர். ஆனால், முதல்வர் வீட்டுக்கு 300 மீட்டருக்கு முன்பே இவர்கள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், ''கடந்த 6 மாதங்களாக மாநிலத்தின் நிர்வாகம் முடங்கியுள்ளது. மாநிலத்துக்கு முழு நேர முதல்வர் தேவை. 48 மணிநேரத்தில் முழுநேர முதல்வருக்காக பாரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, போராட்டக்காரர்கள் சார்பில் மனு, முதல்வர் வீட்டுப் பகுதியில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் உள்ள துணை ஆட்சியர் சஷாங்க் திரிபாதியிடம் அளிக்கப்பட்டது.

அப்போது திரிபாதியிடம் முதல்வர் பாரிக்கர் உடல் திறன் இல்லாமல் இருக்கிறாரா என நிருபர்கள் கேட்டபோது, நான் மருத்துவர் இல்லை என்பதால், என்னால் எதையும் கூற இயலாது எனத் தெரிவித்தார்.

போராட்டக்காரர்கள் சார்பில் அவர்களின் பிரதிநிதி எய்ரஸ் ரோட்ரிக்ஸ் கூறுகையில், “ நாங்கள் அளித்த மனுவில் கடந்த 9 மாதங்களாக முதல்வரைப் பார்க்க இயலவில்லை. உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் குறித்து மறைக்கப்படுகிறது, மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. ஆனால், மக்களின் பணம் கோடிக்கணக்கில் உங்கள் சிகிச்சைக்காக செலவு செய்யப்படுகிறது. முதல்வர் பதவியில் முழுநேரம் செயல்பட முடியாவிட்டால் மற்றொருவருக்கு வழிவிடுங்கள் என்று தெரிவித்தோம். ஏனென்றால், கடந்த 9 மாதங்களாக மாநில நிர்வாகம் முடங்கி இருக்கிறது” என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x