Last Updated : 21 Nov, 2018 12:35 PM

 

Published : 21 Nov 2018 12:35 PM
Last Updated : 21 Nov 2018 12:35 PM

பெண்களுக்கு இட ஒதுக்கீடு: தெலங்கானா தேர்தலில் புறக்கணித்த அரசியல் கட்சிகள்

தெலங்கானாவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை ஆதரித்தபோதிலும், சட்டப்பேரவை தேர்தலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தெலங்கானாவில் அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்தும் செயல்பாட்டில் கொண்டுவரவில்லை.

தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கும் டிசம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி இதுவரை 100 வேட்பாளர்களுக்கு அவர்கள் போட்டியிடுவதற்கான பி-படிவத்தை வழங்கியுள்ளது. அதில் 11 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள்.

ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 119 தொகுதிகளில் மொத்தம் 4 பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 6 பெண்களுக்கு வாய்ப்பளித்த நிலையில், இந்த முறை 4 பெண்களாகச் சுருங்கிவிட்டது.

காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது என்று அந்தக் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர் நேற்று பேசுகையில், ''நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. இதில் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் கிடைத்துவிட்ட நிலையில், மாநிலங்களவையில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதன் காரணமாக 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாமல் போனது. நாங்கள் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்காவிட்டாலும் கூட 11 இடங்கள் வழங்கி இருக்கிறோம். ஆனால், டிஆர்எஸ் கட்சி 6 இடத்தில் இருந்து 4 இடங்களாகக் குறைந்துவிட்டது'' என்று விமர்சித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் ஜே. கீதா ரெட்டி, டி.கே.அருணா, சுனிதா லட்சுமா ரெட்டி, சபிதா இந்திரா ரெட்டி ஆகிய பெண்கள் இந்த முறையும் போட்டியிடுகின்றனர்.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 14 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்துள்ளது. முன்னாள் முதல்வர் ராமா ராவின் பேத்தி சுஹாசினி, குல்காட்பள்ளி தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிடுகிறார்.

தெலங்கானா ஜன சமிதி கட்சி ஒரு பெண்ணுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. அந்தக் கட்சி சார்பில் பவானி ரெட்டி சித்திபேட் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாஜக சார்பில் 14 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் ஒரு பெண் வேட்பாளர் கூட போட்டியிடவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x