Published : 19 Nov 2018 05:11 PM
Last Updated : 19 Nov 2018 05:11 PM

குண்டுவெடிப்பு நடந்த இடத்தைப் பார்வையிடும் முதல்வருக்கு ஆரவார வரவேற்பா? ஊடகங்கள் கேள்வியால் சுருட்டி வைக்கப்பட்ட சிவப்புக் கம்பளங்கள்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நடந்த குண்டுவெடிப்பு நடந்த இடத்தைப் பார்வையிட வந்த முதல்வருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிவப்புக் கம்பள வரவேற்பு ஊடகங்கள் கிண்டலடித்ததால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள அதிவாலா கிராமத்தில் அமைந்துள்ள நிரன்காரிஸ் பவன் என்ற மத வழிபாட்டுத் தலத்தில் நேற்று நடைபெற்ற மத விழாவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், திடீரென வெடிகுண்டுகளை வீசிச் சென்றனர். இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

பஞ்சாப் முதல்வர் கேப்டன் மாரிந்தர் சிங் ஞாயிற்றுக்கிழமை இக் குண்டுவெடிப்பு நடந்த இடத்தைப் பார்வையிடவும் பின்னர், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அச்சமயம் முதல்வர் வந்தால் அவரை வரவேற்க வேண்டும் என்பதற்காக சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் உடனே வலைதளங்களில் பரவின. குண்டுவெடிப்பு நடந்த இடத்தைப் பார்வையிட வரும் முதல்வருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா? என்ற கேள்வி உடனடியாக அனைத்து மீடியாக்களிலும் எதிரொலித்தது.

முதல்வர் வந்துசேர்வதற்குள் நடந்த இச்சம்பவங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிவப்புக் கம்பளத்தை சுருட்டி அப்புறப்படுத்தி விட்டார்கள்.

இதுகுறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் பரம்பால் சிங் கூறுகையில், ''இப்படியொரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஊடகங்கள்தான் வலியுறுத்தின. இப்போது இதே ஊடகங்கள்தான் குண்டுவெடிப்பு நடந்த இடத்தைப் பார்வையிட வருபவருக்கு எதற்கு சிவப்புக் கம்பளம் என்று கேட்கின்றன. இது சரியில்லை. எப்படியோ அவர் வருவதற்குள் அதைச் சுருட்டி அப்புறப்படுத்திவிட்டோம்'' என்றார்.

மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அதிகாரி ஷெர் ஜங் கூறுகையில், ''கிராமங்களில் யாரையாவது வரவேற்க சிவப்புக் கம்பளம் விரிக்கும் வழக்கமெல்லாம் கிடையாது. ஆனால் ஒரு கிராமத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அங்கு வெள்ளைத் துணிகள் படுதாக்களை தொங்கவிடுவது வழக்கம். ஆனால் வாகனங்கள் வருகிறது என்பதால் ஒரு அடையாளத்துக்காகவே சிவப்புக் கம்பளத்தை நாங்கள் விரித்து வைத்தோம்.

மற்றபடி எந்த குறிப்பிட்ட தரைவிரிப்புகளையும் தரையில் போட்டு வரவேற்கும் சடங்கு, நோக்கம் எதுவும் இல்லை'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x