Published : 19 Nov 2018 04:39 PM
Last Updated : 19 Nov 2018 04:39 PM

‘தாடித் திருவிழா’: கேரளாவில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்க ஆயிரம் இளைஞர்கள் ஆர்வம்

கிளீன் ஷேவ், வழுவழுப்பான முகம் என்பது மட்டும் ஆண்மையின் தோற்றத்தின் அழகல்ல. நீண்ட, அடர்த்தியான தாடி, சிறிய அளவிலான தாடி போன்றயும் அழகுதான். இதைக் கொண்டாடும் வகையில் கேரளாவில் தாடித் திருவிழா நடத்த இளைஞர்கள் தயாராகி உள்ளனர்.

கேரளாவில் நடக்கும் 'தாடி மாமாங்கம்' எனப்படும் தேசிய அளவிலான தாடி வளர்த்தவர்களுக்கான போட்டி வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது.

கேரளா பியர்ட் கிளப் சார்பில் கோழிக்கோடு நகரில் உள்ள தாகூர் நூற்றாண்டு அரங்கில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க ஏறக்குறைய நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பதிவு செய்து ஆர்வமாக உள்ளனர். இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

160 உறுப்பினர்கள் கொண்ட கேரளா பியர்ட் கிளப்பில் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து கேரள பியர்ட் கிளப்பின் தலைவர் சோபித் பிரசாந்த் கூறுகையில், “ கேரள மாநிலத்தில் மண்டல அளவிலான பல போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டோம். இதன்மூலம் தாடிப் பிரியர்களுக்கும், அன்பர்களுக்கும் புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறோம். இந்தத் தாடி மாமாங்கம் விழாவின் மூலம் எங்களின் நெட்வொர்க்கை தேசிய அளவில் வளர்க்க இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் இளைஞர்கள் தேசிய அளவில் தாடி வளர்ப்பில் இருக்கும் நவீன டிரண்ட் என்ன என்பதை அறிந்து கொள்வார்கள்.

இந்தத் தாடி மாமாங்கம் விழாவில் வலிமையான தாடி, நீண்ட தாடி, ஸ்டைலான தாடி, பியர்ட் ஹங்க், இளமையான தாடி ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் போட்டி நடத்தப்படுகிறது. பார்வையாளர்களாக வருபவர்களுக்கும் தனியாகப் போட்டி நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு பரிசும், வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்படும்.

தாடி மாமாங்கத்தைத்தையும் தாண்டி, நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களும் தங்களின் கலாச்சாரத்தையும், பின்புலங்களையும் பகிர்ந்து கொள்ளும் இடமாக இது அமையும். பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும். இந்தப் போட்டியில் எங்களின் கிளப்பின் மூத்த உறுப்பினர் ஆழப்புழா ரெஜி டேனியல், ஜூனியர் உறுப்பினர் கண்ணூர் அவினாஷ் ஆகியோர் வரை அனைவரும் சமூக பணிகளில் ஆர்வமாக இருப்பவர்கள்.

இதுமட்டுமல்ல எங்கள் கிளப் சார்பாக ரத்த தானம், கேரள வெள்ள மீட்புப் பணி போன்றவற்றிலும் ஈடுபட்டோம்” என சோபித் பிரசாந்த் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x