Published : 19 Nov 2018 02:11 PM
Last Updated : 19 Nov 2018 02:11 PM

பெட்ரோல், டீசல் தேவையில்லை; தண்ணீர், அலுமினியத்தில் இயங்கும் நவீன கார்

சுற்றுப்புறச்சூழல் மாசு, காற்று மாசு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மின்னணு வாகனங்களை அரசு ஊக்கப்படுத்தி வரும் நிலையில், பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் அலுமினியத்திலும், தண்ணீரிலும் இயங்கும் காரைக் கண்டுபிடித்து இயக்கி வருகிறார்.

பெங்களூரில் உள்ள இந்திய இன்ஸ்ட்டியூட் ஆஃப் சயின்ஸ் பயிலும் பொறியாளர் அக்‌ஷய் சிங்கால் இந்தக் காரை கண்டுபிடித்துள்ளார். அக்‌ஷய் சிங்காலும் அவரின் நண்பரும் இணைந்து லாக் 9 மெட்டீரியல்ஸ் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கி, தங்களின் கண்டுபிடிப்பில் தண்ணீரில் காரை இயங்கியுள்ளனர்.

வழக்கமாக இந்த மின்னணு காருக்கு லித்தியம் பேட்டரிதான் பயன்படுத்தப்படும். ஆனால், அக்‌ஷய் சிங்கால் உருவாக்கியுள்ள இந்த காரில் கிராபைன் (graphene) மூலம் உருவாக்கப்பட்ட மெட்டர் ஏர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சிங்கால் கூறுகையில், ''இனிவரும் தலைமுறையினர் பயன்படுத்தும் மின்னணு வாகனங்களில் லித்தியம் பேட்டரி பயன்பாடு குறைந்துவிடும். அதற்கு மாற்றாக கார்பனின் கூறான கிராபைன் மூலம் உருவாக்கப்படும் மெட்டர் ஏர் பேட்டரிகள் பயன்படுத்தப்படும்.

வழக்கமாக லித்தியம் பேட்டரிகள் காரில் பொருத்தப்பட்டு, தேவையான சக்தி காரை இயக்குவதற்குச் சேமிக்கப்படும். ஆனால், இந்த பேட்டரியால் புதிதாகச் சக்தியை உருவாக்க இயலாது. உதாரணமாக, நான் பயன்படுத்தும் காரில் லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டு அதை 5 மணிநேரம் சார்ஜ் செய்தால், 100 முதல் 150 கி.மீ. ஓட்ட முடியும். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து கோரமங்களா வரை செல்லலாம், ஆனால், திரும்பி வரும் அளவுக்கு பேட்டரியில் திறன் இருக்காது. மின்னணு வாகனங்களில் இந்தக் குறைபாடு இருப்பதால்தான் மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை.

இந்தக் குறைபாட்டை நீக்கும் பொருட்டு மாற்று எரிபொருளாக பெட்ரோல் பயன்படுத்துவதைக் காட்டிலும், தண்ணீரைப் பயன்படுத்தி காரை இயக்க முடிவு செய்தோம். இதற்காகவே நானும் எனது கல்லூரித் தோழரும், ஐஐடி ரூர்கேவில் படித்தவருமான கார்த்திக் ஹஜேலாவும் சேர்ந்து லாக் 9 எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை 2015-ம் ஆண்டு தொடங்கினோம்.

கிராபைன் மூலம் நாங்கள் உருவாக்கும் பேட்டரியின் உற்பத்தி மதிப்பு என்பது லித்தியம் அயன் பேட்டரியின் தயாரிப்பு செலவைக் காட்டிலும் பாதியாகத்தான் இருக்கும். ஒருமுறை பேட்டரியை அலுமினியம் மற்றும் தண்ணீரால் நிரப்பிவிட்டால், ஏறக்குறைய ஆயிரம் கி.மீ. பயணிக்க முடியும்'' எனத் தெரிவித்தார்.

கிராபைன் எனப்படும் உலோகம் பேப்பரைக் காட்டிலும் 10 லட்சம் மடங்கு மெலிதானது. அதேசயம், ஸ்டீலைக் காட்டிலும் 200 மடங்கு வலிமையானது. அடுத்த தலைமுறையினர் பயன்படுத்தும் பேட்டரிகள் கிராபைன் மூலமே உருவாக்கப்படும் சாத்தியம் அதிகம் இருக்கின்றன. இந்த கிராபைட், அலுமினியம் மற்றும் தண்ணீர் ஆகிய மூன்றும் சேர்ந்து பேட்டரி தயாரிக்கப்பட்டு காரை இயக்கப்படும்போது இந்த பேட்டரி உற்பத்தி செய்யும் மின்சாரத்தால் காரை இயக்க முடியும்.

இதுகுறித்து ஐஐஎஸ்சி நிறுவனத்தின் எரிசக்திதுறை பேராசிரியர் மிஸ்ரா கூறுகையில், ''மின்னணு வாகனங்கள் விற்பனையில் மிகப்பெரிய பின்னடைவான சக்தியைச் சேமித்து வைத்தல் பிரச்சினை, அடிக்கடி சார்ஜ் செய்யவேண்டிய பிரச்சினை ஆகியவற்றை கிராபைன் மூலம் தீர்க்கலாம். இதை வர்த்தக ரீதியாகக் கொண்டு வரும்போது பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x