Published : 19 Nov 2018 12:49 PM
Last Updated : 19 Nov 2018 12:49 PM

ஆர்பிஐயை அழிக்க முயலும் மோடி; உர்ஜித் படேல் மற்றும் குழுவுக்கு முதுகெலும்பு இருக்கும் என நம்புகிறேன்- ராகுல் காந்தி காட்டம்

ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்று வரும் சூழலில், மோடி தன்னிச்சையான அமைப்புகளை அழித்து வருவதாகவும் அதை எதிர்த்துப் போராட ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேல் மற்றும் குழுவுக்கு முதுகெலும்பு இருக்கும் என்று நம்புவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதில் இருந்தே ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே இணக்கமான போக்கு காணப்படவில்லை. ரிசர்வ் வங்கியை நிர்வகிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர், துணை ஆளுநர்கள் இருந்தபோதிலும், கூடுதலாக ரிசர்வ் வங்கி வாரியக் குழுவை மத்திய அரசு நியமித்தது.

வங்கியில் அந்தக் குழுவின் தலையீடு அதிகமாக இருந்ததால், இருதரப்புக்கும் இடையே மறைமுகமாக இருந்து வந்த உரசல் சமீபத்தில் வெளிச்சமானது. ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார்.

இந்தச் சூழலில் ஆண்டுதோறும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஈவுத்தொகை வழங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்க உள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கியிடம் உபரி நிதியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை தனது நிதிப்பற்றாக்குறையைச் சரி செய்து கொள்வதற்காக கேட்டு, மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரத்தால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித்படேலுக்கும், நிதி அமைச்சகத்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழலில் ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள ராகுல் காந்தி, ''மோடியும் அவரின் சேவகர்களும் தங்களின் கைகளில் கிடைக்கும் அனைத்து நிறுவனங்களையும் நசுக்கி வருகின்றனர். இன்று நடைபெறும் ஆர்பிஐ வாரியக் கூட்டத்தில் மோடி தன்னுடைய கைப்பாவைகள் மூலம் ஆர்பிஐயை அழிக்க முயற்சி செய்வார். அவரை எதிர்த்துப் போராட ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேல் மற்றும் அவரின் குழுவினருக்கு முதுகெலும்பு இருக்கிறது. பிரதமரின் இடத்தை அவருக்கு சரியாகக் காட்டுவார் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x