Published : 19 Nov 2018 11:39 AM
Last Updated : 19 Nov 2018 11:39 AM

பஞ்சாப் குண்டுவெடிப்பு; குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்போருக்கு ரூ.50 லட்சம் பரிசு: முதல்வர் அறிவிப்பு

பஞ்சாபில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியதில் நால்வர் உயிரிழந்தனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்துத் தகவல் அளிப்போருக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று மாநில முதல்வர்  அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள அதிவாலா கிராமத்தில் ‘நிரன்காரிஸ் பவன்’ என்ற பெயரில் மத வழிபாட்டுத் தலம் உள்ளது. இங்கு ஞாயிற்றுக் கிழமைதோறும் மதக் கூட்டமும் விழாவும் நடைபெறும். அதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபடுவர். வழக்கம் போல் நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை) நிரன்காரிஸ் பவனில்  மதக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது இருசக்கர வா.கனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், திடீரென வெடிகுண்டுகளை வீசிச் சென்றனர். இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து உள்துறைச் செயலர், டிஜிபி, சட்டம் ஒழுங்கு பிரிவு டிஜி, புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் அமரிந்தர் சிங் அவசர ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும், முதல்வர் அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பஞ்சாப் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்துத் தகவல் அளிப்போருக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும். அதற்கு காவல்துறையின் உதவி எண்ணான 181-ஐ அழைத்துத் தகவலை அளிக்கலாம். துப்பு கொடுப்பவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்'' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரன்காரிஸ் பவன் மீது வெடிகுண்டு வீசியது டர்பன் அணிந்திருந்த 2 இளைஞர்கள் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x