Published : 19 Nov 2018 10:22 AM
Last Updated : 19 Nov 2018 10:22 AM

சபரிமலையில் நள்ளிரவில் போராட்டம்: 70 பக்தர்கள் கைது; போலீஸார் அத்துமீறல் என புகார்

சபரிமலையில் இரவு தங்க அனுமதிக்காமல் பக்தர்களை  கீழே இறக்க போலீஸார் முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் நடவடிக்கையை கண்டித்து இரவு முழுவதும் போராட்டம் நடந்தது. 70 பக்தர்கள் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையி லான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து அமைப்பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.

இந்தநிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டது. கடந்தமுறை நடந்த போராட்டத்தையடுத்து முன்னெச்சரிக்கையாக  ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமன்றி வழிபாடு நடத்தவரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை கேரள போலீஸார் விதித்தனர்.

அரவணை பாயசம், அப்பம் உள்ளிட்ட பிரசாதங்கள் விற்பனை செய்யும் கவுன்டர்களை இரவு 10 மணிக்கு மூடவும், அன்னதான கூடங்களை 11:00 மணக்குள் மூட வேண்டும், கோயில் நடையை இரவு சாத்தி சாவியை ஒப்படைக்க வேண்டும், சன்னிதானத்தில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்குள் அடைக்கப்பட வேண்டும், பக்தர்கள் யாரும் இரவு சன்னிதானத்தில் தங்கக்கூடாது என்று போலீஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று சபரிமலை சன்னிதானத்தில் இரவு தரிசனம் முடித்து வெளியே வந்த பக்தர்களை உடனடியாக மலையை விட்டு கீழே இறங்குமாறு போலீஸார் உத்தரவிட்டனர். இதற்கு பக்தர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரவு நேரத்தில் மலையை விட்டு இறங்க வாய்ப்பில்லை எனவும், காலையில் தான் இறங்க முடியும் எனவும் தெரிவித்தனர். ஆனால் பக்தர்கள் சிலரை போலீஸார் வலுக்கட்டாயமாக கீழே இறக்க முற்பட்டனர்.

இதையடுத்து போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் 70 பக்தர்களை போலீஸார் கைது செய்து ஒரிடத்தில் அடைத்து வைத்தனர். இதனால் சபரிமலை சன்னிதானம் பகுதியில் திரண்ட பக்தர்கள் போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார் கெடுபிடிகளை திரும்பப் பெறக்கோரி முழுக்கங்களை எழுப்பினர். இதனால் சபரிமலையில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு பக்தர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியது.

இந்த தகவல் வெளியானதும், பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நள்ளிரவில் மாநிலம் முழுவதும் உடனடியாக போராட்டத்தை தொடங்கினர். திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட்ட இந்து அமைப்பினர் போலீஸ் நடவடிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டனம் தெரிவித்தனர்.

இதுபோலவே கோழிக்கோடு, மலப்புரம், கொச்சி, பத்தனம்திட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பாஜகவினர் நள்ளிரவில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

பல இடங்களில் போராட்டம் நடத்திய இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், ஐயப்பா சேவா சங்கத்தினரும் கைது செய்யப்பட்டனர். பாஜகவினர் தொடர்ந்து இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி

இந்த நிலையில் கேரள போலீஸாரின்  நடவடிக்கைக்கு மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘சபரிமலை பக்தர்கள் மீது கேரள அரசு வன்முறையை ஏவிவிட்டுள்ளது. சபரிமலையில் 15 ஆயிரம் போலீஸாரை கேரள அரசு குவித்துள்ளது. பக்தர்கள் என்ன தீவிரவாதிகளா? வழிபாடு நடத்தவரும் பக்தர்களை துன்புறுத்தும் போலீஸாரின் நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். கேரளாவில் அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி அமலில் உள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து பாஜகவினர் ஆளுநர் சதாசிவத்தை இன்று சந்தித்து கோரிக்கை மன அளிக்கவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x