Published : 10 Nov 2018 10:45 AM
Last Updated : 10 Nov 2018 10:45 AM

சபரிமலைக்கு பெண்களை அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர்: போராட்டத்தை தடுக்க கேரள அரசு புதிய திட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 முதல் 50 வயது கொண்ட 550க்கும் மேற்ப்பட்ட பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள நிலையில், போராட்டகார்களிடம் சிக்காமல் அவர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல கேரள அரசு திட்டமிட்டு வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் செல்ல நூற்றாண்டுகளாகத் தடை இருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலம் முழுவதும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகத் தொடர் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வந்தன.

சமீபத்தில் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை திறக்கப்பட்டபோது, அங்கு சாமி தரிசனத்துக்கு வந்த 50 வயதுக்குட்பட்ட பெண்களை போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசனில் தரிசனம் செய்ய இதுவரை ஆன்லைன் மூலம் 3.50 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் 550க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு முன்பதிவு செய்துள்ள பெண்களை பாதுகாப்புடன் சபரிமலை கோயிலுக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் வசதியை பயன்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. மத்திய பாதுகாப்புத்துறையிடம் ஹெலிகாப்டர்களை பெற்று அதன் மூலம் பெண்களை அழைத்துச் செல்லபட உள்ளனர்.

திருவனந்தபுரம் அல்லது கொச்சியில் இருந்து இந்த ஹெலிகாப்டர் சேவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் அழைத்து செல்வதன் மூலம் பெண்களை போராட்டக்காரர்கள் தடுக்க வாய்ப்பில்லை. மேலும் முழு பாதுகாப்புடன் அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல முடியும். எனவே ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.

ஹெலிகாப்டர் சேவையை அமல்படுத்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டும். எனவே மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த திட்டத்தை கேரள அரசால் செயல்படுத்த முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x