Published : 10 Nov 2018 10:50 AM
Last Updated : 10 Nov 2018 10:50 AM

பெண்கள் பகலில் நைட்டி அணிந்து வெளியே வருவதால் தேவையற்ற சிக்கல்கள் - தடை விதித்த ஆந்திரா கிராமம்

நைட்டி அணிந்துகொண்டு வீட்டைவிட்டு வெளியே பொது இடங்களுக்கு வரக்கூடாது என ஆந்திராவைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை உள்ளூர் பெண்கள் வரவேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேவையற்ற சிக்கல்கள் மற்றும் அவமானங்களுக்கு காரணமாகும் வகையில் பகல்பொழுதில் பெண்கள் நைட்டி அணிந்துகொண்டு பொது இடங்களுக்கு வெளியேவரக்கூடாது.

அப்படி விதிகளை மீறி வந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க ஆந்திராவின் மேற்கு கோதாவரியைச் சேர்ந்த டோகலாபள்ளி என்ற கிராமத்தில் சாதிப் பஞ்சாயத்து எனப்படும் கிராமக்குழு முடிவு செய்துள்ளது.

யார் என்ன உடை அணிவது என்று உத்தரவிடுவது ஒருவகையில் ஆட்சேபனைக்குரிய ஒன்று என்றாலும், மருத்துவமனைகள், கடைவீதிகள், பள்ளிகள் மற்றும் வேறுபல பொது இடங்களிலும் பகல்நேரங்களில் பெண்கள் நைட்டி அணிந்து வரும்போது அந்த நாளே அவர்களுக்கு ''அசௌகரியமானதாக'' அமைந்துவிடுவதாக இவர்கள் கூறுகின்றனர்.

இதைக் கருத்தில்கொண்டே இக்கிராம பஞ்சாயத்து சமீபகாலமாகவே இப்பிரச்சினை குறித்து விவாதித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாகவே பொது இடங்களில் உள்ளூர்வாழ் பொதுமக்களின் ஒழுக்கத்தை உறுதிப்படுத்த "ஆடைக் கட்டுப்பாடு" ஒன்றை வெளியிட்டனர்.

அதன்படி அதிகாலையில் இருந்து மாலை வரை பெண்கள் நைட்டி அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. டோகலாபள்ளியைச் சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் தெரிகிறது.

சாதிப் பஞ்சாயத்தின் குலா பேடா (மூத்த உறுப்பினர்) பாலே சீதாராமுடு இதுகுறித்து தி இந்து (ஆங்கிலம்) விடம் தொலைபேசியில் தெரிவிக்கையில், ''இத்தீர்மானத்தை நாங்கள் ஆறுமாதங்களுக்கு முன்பே எடுத்துவிட்டோம். இதுநாள்வரை எந்தவித ஆட்சேபனையும் வந்ததில்லை. உண்மையில் பெண்கள் எங்கள் முடிவை வரவேற்றுள்ளனர்.

இந்த உத்தரவுக்குப் பிறகு பெண்கள் தாங்களாகவே இதை பின்பற்றத் தொடங்கிவிட்டதால் அபராதம் விதிக்கப்படுவது போன்ற எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை. அபராதத் தொகை செலுத்துவது என்பது இங்குள்ள ஒரு வழக்கமான நடைமுறை. நாங்கள் எந்த விதிமுறைகளையும் எங்கள் சமுதாயப் பஞ்சாயத்து மூலமாகத்தான் கொண்டுவருவோம். கொல்லேரு ஏரியைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் இதுதான் நடைமுறை.''

இவ்வாறு சீதாராமுடு தெரிவித்தார்.

இங்கு பெரும்பாலும் வட்டி சமூகத்தினரே அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களுடன் சிற்சில மீனவர்களும், கல்லுடைக்கும் தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும் வசிக்கின்றனர். ஒன்பது உறுப்பினர்கள் ஒவ்வொரு ஆண்டும் வட்டி சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இக்கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜி.மகாலட்சுமி கூறுகையில், ''பஞ்சாயத்தார் தீர்மானத்தில் தவறு ஒன்றும் இல்லை. உண்மையில், பகலில் நைட்டி அணிந்து செல்லும்போதுதான் பல அவமானங்களை பெண்கள் சந்திக்கின்றனர்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x