Last Updated : 07 Nov, 2018 09:25 PM

 

Published : 07 Nov 2018 09:25 PM
Last Updated : 07 Nov 2018 09:25 PM

‘ரஃபேல் ஒப்பந்த ஊழலைக் காட்டிலும் பெரியது மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டம்’: வேளாண் ஆர்வலர் சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு

மத்தியில் ஆளும் மோடி அரசு விவசாயிகளுக்காகச் செயல்படுத்தி வரும் பயிர் காப்பீடு திட்டம், ரஃபேல் போர்விமானக் கொள்முதல் ஊழலைக் காட்டிலும் மிகப்பெரியது என்று மூத்த பத்திரிகையாளரும், வேளாண் ஆர்வலருமான பி.சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

மும்பையில், கடந்த 3 நாட்களாக கிசான் சுவராஜ் சம்மேளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்று வேளாண் ஆர்வலர் பி.சாய்நாத் பேசியதாவது:

''மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கொள்கைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிரானது. குறிப்பாகப் பிரதமர் பிமா பசல் யோஜனா திட்டம் என்பது ரஃபேல் போர்விமானக் கொள்முதல் ஊழலைக் காட்டிலும் மிகப்பெரியது. குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார் ஆகிய நிறுவனங்கள் நன்றாகச் சம்பாதிக்கும் நோக்கில் இந்தக் காப்பீடு அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, மகாராஷ்டிராவில் 2.80 லட்சம் விவசாயிகள் சோயா பயிரிட்டுள்ளனர். ஒரு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் காப்பீடு தொகையாக ரூ.19.20 கோடியைக் காப்பீடு நிறுவனத்திடம் செலுத்துகிறார்கள். மத்திய அரசும், மாநில அரசும் தனித்தனியாக தலா ரூ.77 கோடி செலுத்துகிறார்கள். ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் காப்பீடு நிறுவனத்துக்கு ரூ.173 கோடி கிடைக்கிறது.

ஒட்டுமொத்த பயிரும் மழையில்லாமல் கருகிப்போனால் கூட காப்பீடு நிறுவனம் ரூ.30 கோடி மட்டுமே இழப்பீடாகத் தரும். ஆனால், எந்தவிதமான முதலீடும் செய்யாமல் காப்பீடு நிறுவனம் ரூ.143 கோடி எடுத்துக்கொள்ளும். இது ஒரு மாவட்டத்துக்கான பணம், இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இதுபோன்றுதான் நடந்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக, ஒவ்வொரு நாளும் 2 ஆயிரம் விவசாயிகள் வேளாண் தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். விவசாயிகள் சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் செய்வது குறைந்து வருகிறது. விவசாயிகள் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது 86 சதவீதம் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும், 80 சதவீதம் குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகளும் கடனில் சிக்கித் தவிக்கிறார்கள்.

படிப்படியாக நமது விவசாயிகள் விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இழந்து வருகிறார்கள். மகாராஷ்டிராவில் 55 சதவீதம் மக்கள் விவசாயம் பொய்த்ததால், மும்பைக்கு வந்துவிட்டனர். விவசாயம் நடைபெறவில்லை.

நாட்டில் விவசாயிகள் தற்கொலை நடந்து வருகிறது ஆனால், அது குறித்த எந்தப் புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் படி, கடந்த 1995 முதல் 2015-ம் ஆண்டுவரை 3.10 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால், 2015 முதல் 2018-ம் ஆண்டுவரை விவசாயிகள் தற்கொலை குறித்த எந்தப் புள்ளிவிவரத்தையும் என்சிஆர்பி வெளியிடவில்லை. மத்திய அரசு அதற்கு அனுமதிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

இம்மாதம் 29 மற்றும் 30-ம் தேதிகளில் விவசாயிகள் டெல்லிக்கு நாடாளுமன்றத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துவதே நமது கோரிக்கை. ஜிஎஸ்டி சட்டம் நிறைவேற்ற நள்ளிரவில் நாடாளுமன்றம் கூடும் போது, விவசாயிகளுக்காகக் கூட்டப்படாதா?''

இவ்வாறு சாய்நாத் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x