Published : 05 Nov 2018 02:56 PM
Last Updated : 05 Nov 2018 02:56 PM

புலியை டிராக்டர் ஏற்றிக் கொன்ற கிராம மக்கள்: மனிதனை கடித்ததால் ஆவேசம்

உத்தரப் பிரதேசத்தில் வனப்பகுதியில் 50 வயது நபரை அடித்துக் கொன்ற புலியை கிராம மக்கள் டிராக்டர் ஏற்றி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காராஷ்டிரா மாநிலம் யவாடாமால் மாவட்டத்தில் உள்ள பந்தர்காவாடா வனப்பகுதியில் பெண் புலி ஒன்று ஆட்கொல்லியாக மாறியுள்ளது. ஆவ்னி என பெயரிடப்பட்ட இந்த பெண் புலி 13 பேரை வேட்டையாடியுள்ளது. இதனால் கிராமப்புறங்களில் அச்சம் நிலவியது.

13 மனிதர்களை கொன்று அவர்கள் உடலை ருசித்த இந்த புலியை கொல்ல வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆவ்னி புலியை தேடி 3 மாதங்களாக ட்ரோன் மற்றும் நவீன கருவிகளுடன் அந்த வனப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு இருந்தனர். புலியை உயிருடன் பிடிக்க முயன்ற அவர்கள் சில தினங்களுக்கு முன்பு சுட்டுக்கொன்றனர். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் ஆவ்னி புலி கொல்லப்பட்ட ஒரு சில நாட்களுக்குள் உத்தரப் பிரதேசத்தில் மற்றொரு புலியை கிராம மக்கள் டிராக்டர் ஏற்றிக் கொன்றுள்ளனர்.

லக்னோவில் இருந்து 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தூத்வா புலிகள் காப்பகம். இங்குள்ள பெண் புலி ஒன்று அருகே உள்ள கிராமத்துக்குள் அடிக்கடி புகுந்து ஆடு, கோழி, மாடுகளை அடித்துச் கொன்று தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அந்த கிராமத்தைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு அந்த வனப்பகுதியில் வழியாக கிராமத்துக்கு சென்றபோது, மறைவிடத்தில் இருந்து தாக்கிய புலி அவரை கடித்துக்குதறியது.

புலியால் தாக்கப்பட்ட அவர் உதவிகோரி அலறினார். இதையடுத்து அந்த பகுதியாக சென்றவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர். இதனால் அந்த புலி அங்கிருந்து தப்பியோடி விட்டது. பலத்த காயமடைந்த நபர் உடனடியாக மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனால் ஆவேசமடைந்த அவரது உறவினர்களும், கிராம மக்களும் டிராக்டரில் வனப்பகுதிக்கு சென்றனர். காப்புக்காட்டு எல்லைக்குள் வனத்துறை காவலர்களை அடித்து நொறுக்கிய அவர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். காத்திருந்து புலியை கண்டுபிடித்த அவர்கள் கையில் கிடைத்த கற்கள், கம்புகளால் புலியை கடுமையாக தாக்கினர். அதில் கடுமையான காயமடைந்த புலியின் மீது டிராக்டரை ஏற்றி அவர்கள் கொன்றனர்.

புலியை கொன்ற கிராம மக்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் ‘‘அந்த புலியால் எங்கள் கிராமத்தில் இருந்த ஏராளமான பசுக்கள் கொல்லப்பட்டுள்ளன. இதுபற்றி வனத்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மனிதர்களை தாக்கி கொல்லும் நிலைக்கு புலி வந்த பிறகு தான் நாங்கள் பதில் தாக்குதல் நடத்தினோம்’’ எனக் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x