Published : 22 Oct 2018 01:31 PM
Last Updated : 22 Oct 2018 01:31 PM

பிஷப் பிராங்கோ பாலியல் புகார் வழக்கு: முக்கிய சாட்சியான பாதிரியார் மர்ம மரணம்; உறவினர்கள் குற்றச்சாட்டு

பிஷப் பிராங்கோ மீதான பாலியல் புகார் வழக்கில் முக்கிய சாட்சியான பாதிரியார் குரியகோஸ் கட்டுதாரா பஞ்சாப் மாநிலம் ஹோஷிபூரில் இன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றியவர் பாதிரியார் பிராங்கோ மூலக்கல். இவர் தான் பணியாற்றிய காலத்தில் கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததாக புகார எழுந்தது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி சமீபத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் அளித்தும் 70 நாட்கள் ஆகியும் பிஷப் கைது செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டி கன்னியாஸ்திரிகள் 5 பேர் 14 நாட்களாகப் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து கோட்டயம் போலீஸ் எஸ்.பி.ஹரி சங்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பிஷப் பிராங்கோ தனது பதவியில் இருந்து விலகி விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் பிஷப் பிராங்கோவுக்கு எதிரான வழக்கில் கன்னியாஸ்திரிகளை போலவே, பாதிரியர் குரியகோஸ் முக்கிய சாட்சியாக இருந்தார். ஜலந்தரில் பாதிரியாக பணியாற்றி வந்த குரியகோஸ், பிஷப் பிராங்கோவுக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்தார்.

அவர் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் தனக்கு மிரட்டல் வந்த வண்ணம் இருப்பதாக கூறினார். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் இன்று பாதிரியார் குரிகோஸ் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் குற்ற்மசாட்டியுள்ளனர். பஞ்சாப் போலீஸார் இதுபற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x