Published : 21 Oct 2018 04:28 PM
Last Updated : 21 Oct 2018 04:28 PM

சபரிமலை விவகாரம்: ரெஹானா பாத்திமா முஸ்லிம் சமூகத்தில் இருந்து நீக்கம்; முஸ்லிம் அமைப்பு அதிரடி

இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகக்கூறி சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமாவை முஸ்லிம் சமூகத்தில் இருந்து நீக்கி கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. , ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கும்போது பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தது.

ஆனால், தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், கோயில் தந்திரிகள், இந்து அமைப்புகள் மற்றும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், ஹைதராபாத்தைச் சேர்ந்த மோஜோ தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் கவிதாவும், பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என்பவரும் சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். ஆனால், பக்தர்கள், தந்திரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, அவர்களைக் கீழே இறக்கக் கேரள அரசு உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்தச் சூழலில் சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா சபரிமலையின் மாண்பையும், இந்துக்களின் உணர்வுகளையும் புண்படுத்தியதாகக்கூறி முஸ்லிம் சமூகத்தில் இருந்து கேரள முஸ்லிம் ஜமாத் நீக்கி அறிவித்துள்ளது.

இது குறித்து இருந்து கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சிலின் தலைவர் ஏ.பூக்குஞ்சு, எர்ணாகுளம் மத்திய முஸ்லிம் ஜமாத்துக்கு உத்தரவிட்டு ரெஹானா பாத்திமா, அவரின் குடும்பத்தினரையும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சபரிமலையில் கோடிக்கணக்கான இந்துக்கள் கடைப்பிடிக்கும் பாரம்பரியங்கள், விதிமுறைகளை மீறி ரெஹானா அங்குச் சென்று, இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார். ஆதலால் அவர் முஸ்லிம் சமூகத்தில் இருந்து நீக்கி உத்தரவிடுகிறோம்.

அதுமட்டுமல்லாமல், கிஸ் ஆப் லவ் என்ற போராட்டத்தையும், நிர்வாணமாகத் திரைப்படத்திலும் நடித்து முஸ்லிம் மதத்துக்கு விரோதமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டார்.

ஆதலால், இரு மதங்களுக்கு இடையே மதவிரோதத்தை பரப்பும் எண்ணத்துடன் செயல்பட்ட ரெஹானா பாத்திமா மீது ஐபிசி 153ஏ ப பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாநில அரசு கைது செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x