Last Updated : 17 Oct, 2018 01:17 PM

 

Published : 17 Oct 2018 01:17 PM
Last Updated : 17 Oct 2018 01:17 PM

பாஜகவுக்குப் பின்னடைவு: ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திரா காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்

பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகனும், பார்மர் தொகுதி எம்எல்ஏவுமான மன்வேந்திரா சிங் காங்கிரஸ் கட்சியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைகிறார்.

வரும் டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக எம்எல்ஏ மன்வேந்திரா காங்கிரஸ் கட்சியில் இணைவது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் பார்மர் ஷியோ தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் மன்வேந்திரா சிங்(வயது54). இவர் கடந்த மாதம் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், கட்சியின் மேலிடத்துடன் அதிருப்தி ஏற்பட்டு விலகுவதாக அறிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் மாநிலத்தில் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான முன்னேற்றமும் இல்லை, ஆதலால், தாமரை சின்னத்தில் நின்று போட்டியிட்டு மீண்டும் தவறு செய்யமாட்டேன் என்று கூறி பாஜகவில் இருந்து மன்வேந்திரா விலகினார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக மன்வேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மன்வேந்திராவின் இந்த முடிவு ராஜ்புத் சமூகத்தினரின் வாக்குகளை அதிகமாகப் பெற்றுத்தரும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது. அதேசமயம், அரசியல்ரீதியாக மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் மன்வேந்திரா, ஆனால், இவரின் முடிவு ஆளும் கட்சிக்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று பாஜக நம்புகிறது.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சச்சின் பைலட் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் இன்று முறைப்படி மன்வேந்திர சிங் இணைகிறார். ராகுல் காந்தியை டெல்லியில் சந்திக்கும் மன்வேந்திர சிங் தன்னைகட்சியில் இணைத்துக்கொள்கிறார். பாஜகவில் இருந்து தொடர்ந்து மூத்த தலைவர்கள் விலகிக்கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து அந்தக் கட்சி தங்களை சுயஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மன்வேந்திராவை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது, கட்சியை மேலும் வலுப்படுத்தும். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இன்னும் ஊக்கத்துடன் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் கூறுகையில், அரசியல்ரீதியாக மன்வேந்திரா தவறான முடிவை எடுத்துள்ளார். பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறும் முன் நன்கு சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியே தற்போது உதவி செய்ய ஆள்இல்லாமல் தவிக்கிறது. அதனால்,தான் பாஜகவில் இருந்து விலகி வரும் தலைவர்களை சேர்த்துக்கொண்டு இருக்கிறது. அது மன்வேந்திராவின் தனிப்பட்ட முடிவாக இருக்கலாம், ஆனால், அரசியல்ரீதியாக தவறான முடிவு.

ரஜபுத்திர சமூகத்தினர் பாரம்பரியமாக பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள். மன்வேந்திரசிங் காங்கிரஸ் பக்கம் சென்றாலும் பாஜகவுக்கு பாதிப்பில்லை எனத் தெரிவித்தார்

பார்மர் தொகுதியில் வலிமையாக இருக்கும் ரஜபுத்திர சமூகத்தினர் பாஜகவின் அரசால் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் காரணமாகவே மன்வேந்திர சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். ஆதலால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரம்பரிய ரஜபுத்திரர்கள் வாக்குகள் பாஜகவுக்கு முழுமையாகக் கிடைக்கும் என்பது சந்தேகமே. மன்வேந்திராவின் விலகல் பாஜகவுக்கு தேர்தல் நேரத்தில் கடும் பின்னடைவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x