Published : 15 Oct 2018 08:40 PM
Last Updated : 15 Oct 2018 08:40 PM

மற்றொருவரின் வழிபாட்டு தலத்தில் ராமர் கோயில் கட்ட எந்த ஒருநல்ல இந்துவும் விரும்பமாட்டார்:சசிதரூர் விளக்கம்

அயோத்தியில் ராமர் பிறந்ததாக பெரும்பாலான இந்துக்கள் நம்புகிறார்கள். ஆனால், மற்றொருவரின் வழிபாட்டு தலத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டுமென்று எந்த ஒருநல்ல இந்துவும் விரும்பமாட்டார் என்று காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் விளக்கம் அளித்தார்.

சென்னையில் தி இந்து லிட் பார் லைப் டயலாக் 2018 நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களில் பெரும்பாலானோர் நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், யாரோ சிலரால் இடிக்கப்பட்ட வழிபாட்டுத் தலத்தில் கொண்டுபோய் ராமர் கோயிலை யாரும் கட்டுவதற்கு எந்த நல்ல இந்துவும் விரும்பமாட்டார் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் சசிதரூரின் இந்தக் கருத்துக்கு பாஜக செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

பாஜக செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன் கூறுகையில், தற்போது வழிபட்டுவரும் ராமர் கோயிலை வேறு இடத்துக்கு சசிதரூர் மாற்றக்கூறுகிறாரா?, யாரும் இதுபோன்ற கோரிக்கையை வைத்தது இல்லை எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், சசிதரூரின் கருத்து எந்த அளவுக்கு அவர் நிதர்சனத்தில் இருந்து விலகி இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இந்தக் கருத்து ராகுல் காந்தியுடையது அல்லது சசி தரூரின் கருத்தாக இருக்கும். மக்களின் கருத்தாக இருக்காது. நிதச்சனத்தில் இருந்து விலகிக்கொண்டு, எவ்வாறு இவர்கள் தேர்தல் நேரத்தில் இந்துக்கள் என்று கூறுவார்கள் என்று கண்டித்தார்.

இதற்கிடையே பாஜக தலைவர்கள் தனது கருத்தைத் தவறாக புரிந்து கொண்டார்கள் என்று வேதனைத் தெரிவித்த சசிதரூர் ட்விட்டரில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சில அரசியல் தலைவர்களுக்கு சேவை செய்யும் ஊடகங்கள் மோசமான உள்நோக்கத்துடன் நான் பேசிய வார்த்தைகள் திரித்துக் கூறியதை நான் கண்டிக்கிறேன். நான் என்ன கூறினேன் என்றால், ராமர் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்று பெரும்பாலான இந்துக்கள் விரும்புகிறார்கள். ஆனால், எந்தநல்ல இந்துவும், மற்றொருவரின் வழிபாட்டுத் தலத்தை இடித்துவிட்டு கோயில் கட்ட விரும்பமாட்டார் என்று நான் தெரிவித்தேன்.

இந்த நிகழ்ச்சியில் நான் தெரிவித்த கருத்து என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து, நான் கட்சியின் சார்பாக நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை, கட்சியின் செய்தித்தொடர்பாளராகவும் பேசவும் இல்லை. நான் பேசியதை காங்கிரஸ் கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என சசிதரூர் விளக்கம் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x