Last Updated : 15 Oct, 2018 05:16 PM

 

Published : 15 Oct 2018 05:16 PM
Last Updated : 15 Oct 2018 05:16 PM

யோகப் பயிற்சியெல்லாம் செய்து தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்.. மக்கள் வயிறு பற்றி அவருக்கு கவலை இல்லை: மோடி மீது ராகுல் தாக்கு

மக்களுக்கு உணவு கிடைப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், நன்றாகப் பேசுவதிலும், யோகா செய்தவதிலுமே பிரதமர் மோடி ஆர்வமாக இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

உலக பட்டினிக் குறியீடு குறித்து சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம்(ஐஎப்பிஆர்ஐ) மற்றும் வெல்த்ஹங்கர்லைப் ஆகிவை நடத்திய ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் 119 நாடுகளில் இந்தியா 103-வது இடத்துக்குப் பின்தங்கி இருந்தது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் ப க்கத்தில் இந்தியில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாகச் சாடி கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

நம் நாட்டின் வாட்ச்மேன் ஏராளமாகப் பேசுகிறார். ஆனால், மக்களின் வயிற்றைப் பற்றி மறந்துவிட்டார். யோகா பயிற்சிகள் அதிகமாகச் செய்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார். ஆனால், மக்களுக்கு வயிற்றுக்கு உணவு அளிக்க மறந்துவிட்டார். இவ்வாறு ராகுல் காந்தி சாடியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் கூறுகையில், உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாக இருப்பது வேதனைக்குரியது, கவலைக்குரியது. மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களின் உணவுவிஷயத்தில் தீவிர அக்கறை காட்ட வேண்டும்.

பிரதமர் மோடி நாட்டை பற்றி உயர்வாக பல்வேறு இடங்களில் பேசுகிறார், ஆனால், நாட்டின் பட்டினிக்குறியீட்டை பற்றிப் பேச மறந்துவிட்டார். இதுகுறித்து அறிவில்லாமல் இருந்தால், மக்களுக்கு உணவு வழங்கும் கொள்கைளை நீங்கள் எப்படி வடிவமைப்பீர்கள். உலக பட்டினிக்குறியீட்டில் 103 இடத்துக்கு இந்தியா சரிந்துள்ளது வெட்கக்கேடானது. மிகவும் கவலைப்படக்கூடிய இந்த விஷயத்தில் மத்திய அரசு அதிக அக்கறை காட்டவேண்டும்.

மோடியும், அவரின் அமைச்சர்களும் ஏழைகள் குறித்தும், பட்டினியால் வாடும் மக்கள் குறித்தும் ஒருபோதும் பேசுவதில்லை. நாட்டில் பட்டினியை ஒழிப்பதற்கான வழியை மத்திய அரசு முதலில் காண வேண்டும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x